புதுடில்லி,-”சினிமாவுக்கு மொழி ஒரு தடையேயில்லை; சர்வதேச அளவில் இந்திய மொழி படங்களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது,” என, மத்திய செய்தி, ஒலிபரப்பு துறை இணையமைச்சர் எல்.முருகன் பெருமையுடன் குறிப்பிட்டார்.
ஐரோப்பிய நாடான பிரான்சின் கேன்ஸ் நகரில் சர்வதேச திரைப்பட திருவிழா நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்தியா நடத்திய கருத்தரங்கில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய இணைஅமைச்சர் முருகன் பேசியதாவது:சினிமாவுக்கு மொழி ஒரு தடையில்லை. சர்வதேச அளவில் இந்திய மொழிப் படங்களுக்கு சிறப்பான வரவேற்பு உள்ளது. உலகிலேயே இந்தியாவில், அதிக அளவில் திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆண்டுக்கு, 20க்கும் மேற்பட்ட மொழிகளில், 2,000க்கும் மேற்பட்ட சினிமாக்கள் தயாரிக்கப்படுகின்றன.இந்தியாவில் திரைப்படம் தயாரிக்க வெளிநாட்டு சினிமா தயாரிப்பாளர்கள் முன் வர வேண்டும்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு படங்களுக்கு, 30 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. மேலும் இந்தியர்களை சினிமா தயாரிப்பில் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது.வெளிநாட்டு திரைப்பட நிறுவனங்களுக்கு தேவையான அனுமதிகளை வழங்க ஒற்றை சாளர வசதி செய்யப்பட்டுள்ளது.’போஸ்ட் புரொடக் ஷன்’ எனப்படும் திரைப்படத்துக்கான பின்னணி இசை, ஒலி – ஒளி அமைப்பு போன்றவற்றில் இந்தியா நிபுணத்துவம் பெற்றுள்ளது. இதில் பல ‘ஸ்டார்ட்அப்’ நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் இந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு பெரும் பாராட்டு குவிந்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement