கொழும்பு,
இலங்கையில் அன்னிய செலாவணி பற்றாக்குறையால், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு நீடித்து வருகிறது. பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெட்ரோல் வாங்க நீண்ட வரிசை காணப்படுகிறது.
இதற்கிடையே, அப்படி நிற்பவர்களில் ஏராளமானோர், பெட்ரோல், டீசலை வாங்கி பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்று வருவதாக தெரிய வந்தது. இதனால், எரிபொருள் கிடைத்தபோதிலும் நீண்ட வரிசையில் நின்று கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இதை கருத்தில்கொண்டு, பெட்ரோல், டீசலை பதுக்கி வைத்து மறுவிற்பனை செய்பவர்களுக்கு எதிராக நாடுதழுவிய சோதனையை இலங்கை போலீசார் நேற்று தொடங்கினர். இத்தகவலை போலீஸ் செய்தித்தொடர்பாளர் நிஹல் தால்டுவா தெரிவித்தார். அதே சமயத்தில், நேற்று முன்தினம் பெட்ரோலுடன் கொழும்பு துறைமுகத்துக்கு ஒரு கப்பல் வந்ததாகவும், 25-ந் தேதி இன்னொரு பெட்ரோல் கப்பல் வருவதாகவும் இலங்கை எரிசக்தி துறை மந்திரி காஞ்சனா விஜேசேகரா கூறினார்.