ஈடன் கடற்கரையின் நீலக்கொடி சான்றிதழ் புதுப்பிப்பது தொடர்பாக கலெக்டர் ஆலோசனை| Dinamalar

புதுச்சேரி,-சுத்தமான, அழகிய கடற்கரையான சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரையின் ‘புளு பிளாக்’ எனப்படும் நீலக்கொடி சான்றிதழ் புதுப்பிப்பது தொடர்பாக கலெக்டர் வல்லவன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.டென்மார்க் நாட்டை சேர்ந்த சுற்றுச்சூழல் கல்வி அமைப்பானது, உலகில் உள்ள துாய்மையான கடற்கரைகளை தேர்ந்தெடுத்து, ‘புளு பிளாக்’ என்ற நீலக் கொடி சான்றிதழை வழங்கி வருகிறது.இந்த சான்றிதழானது, சுற்றுச்சூழல் மேலாண்மை, கடல் நீரின் தரம், நீல நிறம், பாதுகாப்பு, குளிக்க தகுந்த சுகாதாரமான நீர் உள்ளிட்ட 33 அம்சங்களை ஆராய்ந்து வழங்கப் படுகின்றது.இந்த சான்றிதழ் மூலம் உலகில் அழகான கடற்கரை மற்றும் சுத்தமான கடற்கரை என்று பட்டியலிடப்படுகிறது.கடந்தாண்டு, புதுச்சேரி சின்ன வீராம்பட்டினத்தில் உள்ள ஈடன் கடற்கரைக்கு சிறப்பு மிகுந்த ‘புளு பிளாக்’ அங்கீகாரம் கிடைத்தது.இந்த சான்றிதழுக்கான காலக்கெடு, வரும் செப்டம்பர் மாதம் முடிகிறது. இதனை புதுப்பிப்பதற்கான ஆலோசனை கூட்டம், மாவட்ட கலெக்டர் வல்லவன் தலைமையில் நேற்று நடந்தது.சுற்றுலாத் துறை இயக்குனர் பிரியதர்ஷிணி, துணை கலெக்டர் சுதாகர், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், முரளிதரன், பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில், நீலக்கொடி சான்றிதழ் மீண்டும் பெறுவதற்கான அளவீடுகள், அதற்கான அரசு துறைகள் தடையில்லா சான்றிதழ் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.ஈடன் கடற்கரையில் அனைத்து சிறப்புகளையும் மீண்டும் பரிசீலனை செய்து, அரசு துறைகளின் தடையில்லா சான்றிதழ்களை ஜூன் 10 ம் தேதிக்குள் வழங்க கலெக்டர் வல்லவன் உத்தரவிட்டார்.நீலக்கொடி அங்கீகாரம் கிடைத்துள்ள சின்ன வீராம்பட்டினம் கடற்கரை 2 கி.மீ.,தொலைவிற்கு அழகிய மணற்பரப்பை கொண்டுள்ளது. இதில் 800 மீட்டர் தொலைவிற்கு சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக குளிக்க அனைத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.