ஈரோடு வஉசி மார்க்கெட்டில தக்காளி ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந் துள்ளனர்.
ஈரோடு வஉசி காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறிக் கடைகள் உள்ளன. சத்தியமங்கலம், தாளவாடி, கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம், கர்நாடக மாநிலம் கோலார், ஆந்திரா போன்ற பகுதிகளிலிருந்து நாள்தோறும் காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன. சமீபகாலமாக காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதனால், பல்வேறு காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது.
குறிப்பாக தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து வரத்து குறைந்து வருகிறது. கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனையானது. அடுத்தடுத்த வாரங்களில் தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனையானது.
தினமும் 15 டன் தக்காளி மார்க்கெட்டுக்கு வரும் நிலையில் தற்போது 4 டன் தக்காளி மட்டுமே வருகிறது. இதனால் தக்காளியின் விலை மேலும் அதிகரித்து ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சில வாரங்களுக்கு தக்காளியின் விலை இதே நிலையில் இருக்கும், என மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.