ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவின்பேரில், ரஷ்யப் படையினர் கடந்த பிப்ரவரி 24-ம் தேதியன்று உக்ரைனில் ராணுவத் தாக்குதலை தொடங்கினர். உக்ரைன், நேட்டோ அமைப்பில் சேர்வதை எதிர்த்து ரஷ்யாவால் தொடங்கப்பட்ட இந்தப் போரானது, கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ரஷ்யப் படை வீரர்கள் போர் மேகம் சூழ்ந்திருக்கும் உக்ரைனில், அந்த நாட்டுப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வது, ராணுவ வீரர்களைத் தாண்டி பொதுமக்களை கொன்றுகுவிப்பது என சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக உக்ரைன் தொடர்ந்து குற்றம்சாட்டி, உலக நாடுகளிடம் முறையிட்டு வருகிறது.
இந்த நிலையில், முதன்முறையாக ரஷ்ய ராணுவ வீரர் ஒருவருக்கு உக்ரைன் நீதிமன்றம் ஆயுள்தண்டனை தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டிருக்கிறது. உக்ரைன் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற முதல் போர்க்குற்ற விசாரணையில், ரஷ்ய படையைச் சேர்ந்த டேங்க் கமாண்டர் வாடிம் ஷிஷிமரின்(27), கடந்த பிப்ரவரி 28-ம் தேதியன்று உக்ரைனின் வடகிழக்கு கிராமமான சுபாகிவ்காவில், 62 வயதான ஒலெக்சாண்டர் ஷெலிபோவைத் தான் சுட்டுக் கொன்றதாக குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனடிப்படையில், வாடிம் ஷிஷிமரின்-க்கு உக்ரைன் நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.