பெங்களூரு: உடை என்பது முற்றலும் ஒவ்வொருவரின் விருப்பத்திற்குரியது என்று ஹிஜாப் தொடர்பான கேள்விக்கு பதில் கொடுத்துள்ளளார் உலக குத்துச்சண்டை சாம்பியன் நிகத் ஜரீன்.
25 வயதான இந்திய குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீன், துருக்கியில் நடைபெற்ற மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அவரது வெற்றியை ஒட்டுமொத்த நாடும் கொண்டாடி வருகிறது. காஷ்மீர் முதல் குமரி வரையில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இறுதிப் போட்டியில் தாய்லாந்து வீராங்கனை ஜூடாமாஸ் ஜிட்பாங்கை (Jutamas Jitpong) 5-0 என்ற கணக்கில் வீழ்த்தினார் நிகத். இதன் மூலம் மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற ஐந்தாவது இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். முன்னதாக, மேரி கோம், சரிதா தேவி, ஜென்னி மற்றும் லேகா ஆகிய இந்திய வீராங்கனைகள் இந்த பட்டத்தை வென்றுள்ளனர். 52 கிலோ எடைப் பிரிவில் இந்த தங்கத்தை வென்றுள்ளார் நிகத்.
நிகத் ஜரீன், தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியை சேர்ந்தவர். அவரது அப்பா முகமது ஜமீல் அகமது தான் குத்துச்சண்டையை அறிமுகம் செய்துள்ளார். முதல் ஓராண்டு குத்துச்சண்டை விளையாட்டின் அடிப்படை பாடத்தை அப்பாவிடம் தான் கற்றுதேர்ந்தவர் இன்று சாம்பியன் ஆகியுள்ளார்.
இதனிடையே, ஹிஜாப் விவகாரம் குறித்து நிகத் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். தனியார் டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “உடை என்பது முழுக்க முழுக்க உடுத்துபவர்களின் விருப்பம். மற்றவர்களின் விருப்பங்களில் என்னால் கருத்துகூற முடியாது. எனக்கென தனிப்பட்ட விருப்பங்கள் உள்ளது. நானும் அத்தகைய ஆடைகளை அணிய விரும்பியுள்ளேன். சில சமயங்களில் அந்த ஆடைகளை நானும் எனது குடும்பமும் பொருட்படுத்துவதில்லை என்பதால் மக்கள் என்னைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று நான் கவலைப்படுவதில்லை.
ஆனால் மற்றவர்கள் ஹிஜாப் அணிந்து தங்கள் மதத்தை பின்பற்ற விரும்பினால், அதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர்களின் விருப்பத்தில் நான் உடன்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.