புதுடெல்லி: உத்தர பிரதேசத்தின் மீரட் அருகே உள்ள ஹாஷிம்புராவில் கடந்த 1987-ம் ஆண்டில் 42 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இதன் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
கடந்த 1986-ம் ஆண்டு பிப்ரவரியில் உத்தர பிரதேசத்தின் அயோத்தி ராமர் கோயிலில் வழிபாடு நடத்த மாவட்ட நீதிபதி அனுமதி வழங்கினார். அப்போது மத்தியில் பிரதமராக ராஜீவ் காந்தியும், உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ்முதல்வராக வீர் பகதூர் சிங்கும் பதவி வகித்தனர். மாவட்ட நீதிபதியின் உத்தரவின்படி அயோத்தி ராமர் கோயில் பக்தர்களின் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது.
இதன் காரணமாக கான்பூர், வாரணாசி உட்பட பல்வேறு இடங்களில் கலவரங்கள் ஏற்பட்டன. உத்தர பிரதேசத்தின் மீரட் அருகில் உள்ள ஹாஷிம்புராவில் பெரும் கலவரம் வெடித்தது. அங்கு தலித் மற்றும் முஸ்லிம்கள் இடையே மோதல் மூண்டது. முஸ்லிம்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன. மாநில ஆயுதப் படை போலீஸார் (பிஏசி) வரவழைக்கப்பட்டு கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது.
கடந்த 1987-ம் ஆண்டு மே 19-ம் தேதி ரம்ஜான் நோன்பு காலத்தில் ஹாஷிம்புராவில் மீண்டும் கலவரம் மூண்டது. இதில் 10 பேர் கொல்லப்பட்டனர். கலவரத்தை கட்டுப்படுத்த சிஆர்பிஎப் படையை சேர்ந்த 7 கம்பெனி படைகளும், மாநில ஆயுத படையை சேர்ந்த 30 படைகளும் குவிக்கப்பட்டன. மறுநாள் அங்கிருந்த குல்மார்க் திரையரங்கத்தை ஒரு கும்பல் தீ வைத்து கொளுத்தியது. இதன் காரணமாக கலவரம் தீவிரமடைந்து மேலும் 10 பேர் உயிரிழந்தனர்.
இதைத் தொடர்ந்து ஹாஷிம்புராவில் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கை மீறியதாக 644 பேரை சிஆர்பிஎப் வீரர்கள் பிடித்தனர். அவர்களில் 150 பேர்ஹாஷிம்புராவை சேர்ந்தவர்கள். மாநில ஆயுதப் படை போலீஸாரிடம் அவர்கள் ஒப்படைக்கப் பட்டனர்.
விசாரணைக்குப் பிறகு பெண்கள், முதியோர் மட்டும்வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமிருந்த இளைஞர்களை, மே 22-ல் ஆயுதப்படை போலீஸார்வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அருகிலுள்ள முராதநகரின் கங்கை ஆற்றுப் பாலத்துக்கு கொண்டு சென்று அவர்களை சுட்டுக் கொன்றனர். அவர்களின் உடல்களை ஆற்றில் வீசினர். ஒட்டு மொத்தமாக 42 முஸ்லிம்கள் உயிரிழந்தனர். மாநில அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் குடும் பங்களுக்கு தலா ஐந்தரை லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது.
இந்த படுகொலை தொடர்பாக கடந்த 1988-ம் ஆண்டில் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேந்தர் சச்சார் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு, கடந்த 1995-ம்ஆண்டு ஜூனில் அறிக்கையை சமர்ப்பித்தது.
இந்த அறிக்கையில் 19 ஆயுதப் படை போலீஸார் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். விசாரணை குழுவில் முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால், மூத்த வழக்கறிஞர் ஏ.ஜி.நூரனி, பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் உள்ளிட்ட 7 பேர் இடம்பெற்றிருந்தனர்.
ஆயுள் தண்டனை
டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் ஹாஷிம்புரா படுகொலை வழக்கு விசாரணை நடைபெற்றது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 19 போலீஸாரும் கடந்த 2015-ம்ஆண்டில் விடுதலை செய்யப்பட்ட னர். இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி, 16 போலீஸாருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
மல்யானா படுகொலை
ஹாஷிம்புரா படுகொலைக்கு மறுநாள் மே 23-ல், மீரட் அருகிலுள்ள மற்றொரு பகுதியான மல்யானாவில் 72 முஸ்லிம்கள் ஆயுதப்படை போலீஸாரால் சுட்டுக் கொல்லப் பட்டனர்.
இதுதொடர்பாக நீதிபதி ஜி.எல். ஸ்ரீவாத்ஸவா தலைமையிலான குழு விசாரணை நடத்தியது. இந்த குழுவின் அறிக்கை கடந்த 1989-ம்ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனிடையே கடந்த 1998-ம் ஆண்டு முதல் மீரட் நீதிமன்றத்தில் மல்யானா படுகொலை வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.தற்போது அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப் பட்டு விசாரிக்கப்படுகிறது.
உத்தர பிரதேசத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஹாஷிம்புரா, மல்யானா படுகொலை நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதன்படி ஹாஷிம்புரா நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இன்றுமல்யானா படுகொலை நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது.