கர்நாடகாவில் பட்டியலின சாமியாருக்கு இனிப்பை ஊட்டிவிட்ட முஸ்லிம் எம்எல்ஏ ஒருவர், அவர் வாயில் இருந்த எச்சில் பட்ட இனிப்பை வாங்கி உண்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.
கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் உள்ள சாம்ராஜ்பேட் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருப்பவர் ஜமீர் அகமது கான். இவரது தொகுதியில் நேற்று ஈத் மிலான் பண்டிகையும், அம்பேத்கர் ஜெயந்தியும் ஒருசேர கொண்டாடப்பட்டது.
முஸ்லிம் – பட்டியனத்தவரின் சகோதரத்துவத்தை பறைசாற்றும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. தொகுதி எம்எல்ஏ ஜமீர் அகமது கான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பட்டியலினத்தைச் சேர்ந்த சாமியார் ஒருவர் கலந்து கொண்டார்.
இந்நிலையில், நிகழ்ச்சி நிறைவடைந்ததும் அங்குள்ள அனைவரும் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். அந்த வகையில், மேடையில் இருந்த எம்எல்ஏ ஜமீர் அகமது கான், அங்கிருந்த இனிப்பை எடுத்து பட்டியலின சாமியாருக்கு ஊட்டிவிட்டார். பதிலுக்கு அவரும் இனிப்பை எடுத்து எம்எல்ஏவுக்கு ஊட்டிவிட முயன்றார். அப்போது சாமியாரை தடுத்த எம்எல்ஏ ஜமீர், அவரது வாயில் ஏற்கெனவே இருந்த இனிப்பை உமிழ்ந்து அதனை தனக்கு ஊட்டி விடுமாறு கூறினார். உடனே சாமியாரும் தனது வாயில் இருந்த இனிப்பை உமிழ்ந்து எம்எல்ஏவுக்கு ஊட்டிக் கொடுத்தார்.
சோர்ஸ்: என்டிடிவி
அதை வாங்கி சாப்பிட்ட எம்எல்ஏ ஜமீர், மைக்கை எடுத்து, “பார்த்தீர்களா, இதுதான் சகோதரத்துவம்” எனக் கூறினார். இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் பரவி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM