பெங்களூரு : காங்கிரசில் முதல்வர் வேட்பாளர் பதவிக்கு, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநில தலைவர் சிவகுமார் இடையே பனிப்போர் நடப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அடுத்த சட்டசபை தேர்தலில், ‘சீட்’ பெற இவ்விரு தலைவர்களின் ஆதரவாளர்கள் இடையே, தற்போதே மோதல் துவங்கி விட்டது.
நாட்டின் பல மாநிலங்களில், தோல்வியடைந்து நொந்து நுாலாகியுள்ள காங்கிரஸ், 2023 சட்டசபை தேர்தலுக்கு கர்நாடகா கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளது. எப்படியாவது ஆட்சியில் அமர வேண்டுமென உறுதி பூண்டுள்ளது. சட்டசபை தேர்தலுக்காக, மேலிட தலைவர் ராகுல் தலைமையில், திட்டங்கள் வகுக்கிறது.மாநில காங்., தலைவர் சிவகுமாரும், கட்சி ஆட்சிக்கு வந்தால் முதல்வர் பதவியில் அமரலாம் என்ற கனவில், உற்சாகத்துடன் செயல்படுகிறார். ஆனால், மீண்டும் முதல்வர் பதவி மீது கண் வைத்துள்ள, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, திரைமறைவில் காய் நகர்த்துகிறார்.முதல்வர் வேட்பாளரை முடிவு செய்யும் போது, கட்சி மேலிடத்துக்கு தன் பெயரே கண் முன்னே தோன்ற வேண்டும் என்பது, சிவகுமார், சித்தராமையாவின் விருப்பமாகும். இதற்காக தங்களின் செல்வாக்கை அதிகரிப்பதில், இருவரும் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்குள் நடக்கும் பனிப்போரை, காங்., மேலிடமும் கவனிக்கிறது. இதை சரி செய்யவும் அவ்வப்போது முயற்சிக்கிறது.முதல்வர் பதவிக்கு சித்து, சிவகுமார் இடையே போட்டி ஏற்பட்டுள்ளதை போன்று, அடுத்த சட்டசபை தேர்தலில் சீட் உறுதி செய்து கொள்ள, இவர்களின் ஆதரவாளர்கள், முட்டி மோதுகின்றனர். இது, கட்சி மேலிடத்துக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக மாகடி, துமகூரில் போட்டி அதிகமாக உள்ளது. ராம்நகர் மாகடி தொகுதி ம.ஜ.த., எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் பாலகிருஷ்ணா. நான்கு முறை எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டும், அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. அமைச்சராகும் ஆசையில், சிவகுமாரை நம்பி காங்கிரசில் சேர்ந்தார். கூட்டணி அரசிலும் கூட, இவருக்கு பதவி கிடைக்காமல் ஏமாற்றமடைந்தார்.அடுத்த முறை மாகடியில் போட்டியிட, ‘சீட்’ கேட்டு சிவகுமாரிடம் மன்றாடுகிறார். ஆனால் சித்தராமையாவுக்கு நெருக்கமான ரேவண்ணா, இதே தொகுதியில் போட்டியிட ஆலோசிக்கிறார். சித்தராமையா மூலம், சீட் உறுதி செய்து கொள்ள முயற்சிக்கிறார். இது, பாலகிருஷ்ணாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.மாகடி தொகுதி ம.ஜ.த., – எம்.எல்.ஏ., மஞ்சுநாத், உயர்கல்வித் துறை அமைச்சர் அஸ்வத் நாராயணாவுக்கு நெருக்கமானவர். சமீபத்தில் காங்கிரசின் ரேவண்ணா, பகிரங்கமாக மஞ்சுநாத்தை வானளாவ புகழ்ந்தார். இது, பாலகிருஷ்ணாவின் எரிச்சலை அதிகரித்துள்ளது. இதைப்பற்றி மாநில தலைவர் சிவகுமாருக்கு கடிதம் எழுதி, கோபத்தை கொட்டினார். இம்முறை மாகடியில், ரேவண்ணாவுக்கே டிக்கெட் தர வேண்டும். தானே முன்னின்று பணியாற்றி, அவரை வெற்றி பெற வைப்பதாக கிண்டலுடன் கூறியுள்ளார்.சித்துவின் தீவிர ஆதரவாளரான, முன்னாள் அமைச்சர் சந்தோஷ் லாட், தார்வாடின் கலகடகி தொகுதியில், சீட் எதிர்பார்க்கிறார். ஆனால், சிவகுமாரின் ஆதரவாளர் லட்சுமி ஹெப்பால்கருடன், அடையாளம் காணப்படும் நாகராஜ் சப்பியும், இதே தொகுதியில் கண் வைத்துள்ளார். இதை பொருட்படுத்தாத சந்தோஷ் லாட், சில நாட்களாக தொகுதியில் சுற்றிவந்து, பிரசாரத்தை துவங்கியுள்ளார்.துமகூரு நகர், சிரா, திப்டூர் சட்டசபை தொகுதிகளிலும், சித்தராமையா, சிவகுமார் ஆதரவாளர்களுக்கிடையே, சீட் போட்டி ஏற்பட்டுள்ளது. தனித்தனியாக, ‘லாபி’ நடத்துகின்றனர். காங்., சீட் தராவிட்டால், ம.ஜ.த.,வுக்கு தாவவும், சிலர் தயாராக உள்ளனர்.இதேபோன்று, கர்நாடகாவின் பல்வேறு தொகுதிகளிலும், சித்து, சிவகுமாரின் ஆதரவாளர்கள், சீட்டுக்காக பகிரங்கமாகவே, ‘லாபி’ நடத்துகின்றனர். இப்போதே சீட்டை உறுதி செய்யும்படி, பிடிவாதம் பிடிக்கின்றனர். இது இவ்விரு தலைவர்களுக்கும், புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.பொதுவாக எம்.எல்.ஏ.,க்கள்தான், முதல்வர் யார் என்பதை முடிவு செய்வர். சட்டசபை தேர்தலில், யாருடைய ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனரோ, அவரே முதல்வர் நாற்காலியில் அமர்வார். இதை மனதில் கொண்டே, தங்களின் ஆதரவாளர்களுக்கு, சீட் கிடைக்க செய்ய வேண்டும் என, சித்து, சிவகுமார் விரும்புகின்றனர்.இதற்காக மேலிடத்துக்கும் நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளது. ‘சட்டசபை தேர்தலின் போது, வேட்பாளர் பட்டியல் தயாரிப்பது, காங்., மேலிடத்துக்கு அக்னி பரீட்சையாக இருக்கும் என்பதில், சந்தேகமே இல்லை’ என, கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.