தங்கவயல் : கஞ்சா ஒழிப்புக்கு பெற்றோர், சகோதரர்கள் முன்வர வேண்டும். வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும்” என போலீஸ் எஸ்.பி., தரணி தேவி அழைப்பு விடுத்தார்.போலீஸ் துறையின் விழிப்புணர்வு கூட்டம், தங்கவயல் சாம்பியன் ரீப் பகுதியில் உள்ள தென்னிந்திய பவுத்த சங்க வளாகத்தில் நேற்று மதியம் நடந்தது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட் ராமன், எஸ்.ஐ., சோமசேகர் உட்பட சாம்பியன் வட்டார பிரமுகர்கள், பெண்கள் பலர் பங்கேற்றனர்.போலீஸ் எஸ்.பி., தரணி தேவி பேசியதாவது:தங்கவயலில் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் எனும் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். இதை, போலீசார் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர் என்று யாரும் நினைக்க வேண்டாம்.
விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். அபராதம் வசூலிக்கப்படும்.சாலை பாதுகாப்பை பின்பற்றி, விபத்துகளை தவிர்க்கலாம். உயிரை பாதுகாக்க, வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை மறக்க கூடாது.தங்கவயலில் கஞ்சா போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதை தடுக்க, போலீஸ் துறை மட்டமின்றி, பொதுமக்களும் கூட ஒத்துழைப்பு தரவேண்டும்.
இளைஞர்கள், மொபைல் போனில் யாருடன் என்ன பேசுகின்றனர் என்பதை பெற்றோர் உட்பட குடும்பத்தினர் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். கஞ்சா எங்கிருந்து வருகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அப்படி தெரிந்தால் தான் தடுக்க முடியும்.வீட்டிலுள்ளோர் தம் பிள்ளைகள் நல்லவர்கள் என நினைத்துக் கொண்டிருக்கலாம். பாதிப்பு ஏற்பட்ட பிறகு வருந்தும் நிலைக்கு செல்ல வேண்டாம். ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்துவதற்கான முன்னெச்சரிக்கை தேவை.ரவுடிகளுக்கு அச்சப்பட தேவையில்லை. உங்களுக்கு அப்படி போலீசின் உதவி தேவைப்பட்டால் உடனடியாக அணுகலாம். எண் 112ல் தொடர்பு கொள்ளலாம். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம்.பகுதி தோறும் துாய்மை இந்தியா திட்டத்தின் படி துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்படும். சுத்தம்,
சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். பொதுமக்கள் ஒத்துழைப்புடன் துாய்மை பணிகளை செய்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.டி.எஸ்.பி., முரளிதரா கூறுகையில், ”இப்பகுதியில் ரவுடிகளின் தொல்லை இருப்பதாக தெரிய வந்துள்ளது. அவர்கள் அடக்கப்படுவர். அவர்களின் ‘பாச்சா’ எடுபடாது. ஒழுக்கமுடன் இருக்க வேண்டும் என்றே அறிவுறுத்துகிறோம்.”பெற்றோர் கஷ்டப்பட்டு வளர்த்து, படிக்க வைக்கின்றனர். அவர்களின் நம்பிக்கையை சிதறடிக்க வேண்டாம். தங்களின் எதிர்க்காலத்தை சீராக்கி கொள்ள வேண்டும்,” என்றார்.எஸ்.டி., பிளாக் பிரமுகர் ஆறுமுகம் கூறுகையில், ”கஞ்சா விற்பனை செய்வோர், பயன்படுத்துவோரை பிடித்து தருவது கஷ்டமல்ல. இதனை செய்வோர் ரவுடிகள்; அவர்களை கட்டுப்படுத்தினால் போதைப் பொருள் விற்பனையை ஒழிக்க முடியும். ரவுடிகளை ஒடுக்க போலீசாரின் உத்தரவாதம் தேவை,” என்றார்.
Advertisement