கமலின் விக்ரம் படத்திற்கு அதிகாலை காட்சிக்கான அனுமதி கிடைக்குமா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்பட பலர் நடித்துள்ள படம் விக்ரம். ஜூன்3ஆம் தேதி திரைக்கு வர உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் முதல் நாளன்று திரையரங்குகளில் அதிகாலை காட்சி திரையிடப்பட்டு வருவது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், அதிகாலை காட்சியில் அதிகமான தொகைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாகவும், அதற்குரிய விற்பனை வரியை அரசுக்கு முறையாக செலுத்துவதில்லை என்றும் அந்த மனுவில் கூறி இருப்பதோடு, தமிழக அரசின் சட்ட விதிகளின்படி இரவு 12 மணி முதல் காலை 9 மணி வரை திரையரங்குகளில் திரைப்படங்கள் திரையிடக்கூடாது. ஆனால் விதிகளை மீறி பல திரையரங்குகளில் அதிக காட்சிகள் திரையிடப்பட்டு வருவதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து பதிலளிக்க தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்கள். இதனால் கமல்ஹாசனின் விக்ரம் படத்திற்கு அதிகாலை காட்சிக்கான அனுமதி கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.