பா.ஜ.க-வுக்கு எதிராக காங்கிரஸிலிருந்து தொடர்ச்சியாக விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், “காங்கிரஸ் தனது சொந்த தலைவர்களின் முட்டாள்தனத்தோடு போராடுகிறது” என மத்திய அமைச்சர் அப்பாஸ் நக்வி காங்கிரஸைச் சாடியிருக்கிறார். ஹஜ் நோக்குநிலை நிகழ்ச்சியொன்றில் இன்று கலந்துகொண்ட மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பா.ஜ.க, மோடி மீதான காங்கிரஸின் விமர்சனங்கள் குறித்துப் பேசிய அப்பாஸ் நக்வி, “காங்கிரஸின் இருப்பு வென்டிலேட்டரில் இருக்கும்போது, அதன் தலைவர்களின் `முட்டாள்தனம்’ மட்டும் முடுக்கத்திலே இருக்கிறது.
தீங்கு தரக்கூடிய சித்தாந்தத்துடன் காங்கிரஸ் போராடவில்லை. ஆனால், தங்களின் சொந்த தலைவர்களின் முட்டாள்தனத்துடன் காங்கிரஸ் போராடுகிறது. சில நேரங்களில் அவர்கள் இந்தியாவை பாகிஸ்தான், இலங்கை அல்லது வேறு சில நாட்டோடு ஒப்பிடுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் சில சமயங்களில் அவர்கள், ஒருவித போலியான வெறுப்புணர்வை வளர்த்து, இந்தியாவின் மத நல்லிணக்கம், சகிப்புத்தன்மையின் வலிமையைக் கெடுக்கிறார்கள். இதுபோன்ற செயல்கள் காங்கிரஸ் தலைவர்களின் உச்சக்கட்ட அறியாமை மற்றும் முட்டாள்தனைத்தையே பிரதிபலிக்கிறது” என காங்கிரஸை கடுமையாகச் சாடினார்.