பாஜக ஆளும் அஸ்ஸாம் மாநிலம் நகோவான் பகுதியில் உள்ள பதாத்ரபா காவல் நிலையத்தை அப்பகுதி மக்கள் சிலர் தீ வைத்து கொளுத்தியுள்ளனர். அந்த காவல் நிலையத்தில் கடந்த வெள்ளிக் கிழமை சபிகுல் இஸ்லாம் என்ற மீன் வியாபாரி கைது செய்யப்பட்டார். அந்நபர் காவல் விசாரணையின் போது உயிரிழந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரின் உறவினரும் அப்பகுதி மக்களும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு தீ வைத்துள்ளனர். இந்த செயலில் ஈடுபட்ட ஐந்து குடும்பங்களின் வீடுகளை நகோவான் மாவட்ட நிர்வாகம், `சரியான ஆதாரம் இல்லாமல் போலியான ஆவணங்களை வைத்து சட்டவிரோதமாக குடியேறி இருக்கிறார்கள்’ என்கிற காரணம் காட்டி புல்டோசர் கொண்டு இடித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அத்துடன் தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 20 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து அஸ்ஸாம் டிஜிபி கூறுகையில், “உள்ளூர் வாசிகள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்து இந்த குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைவரும் அடக்கம். இந்த தாக்குதல் உணர்ச்சியால் திடீரென்ற நடைபெற்றது என கருத்தில் கொள்ள முடியாது. திட்டமிடப்பட்டு நடைபெற்ற தாக்குதலாகும். இந்த தாக்குதல் குறித்த முழு ஆதாரத்தையும் திரட்டி வருகிறோம். குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் யாரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது. அதேவேளை, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் அலட்சிய போக்கில் ஈடுபட்ட காவலர்களும் யாரும் தப்ப முடியாது” என அவர் கூறியுள்ளார்.
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா, “ஒரு காவல் நிலையம் எரிக்கப்பட்டிருக்கிறது. எங்கள் அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் வரை இது போன்ற குற்றங்களை நாங்கள் மன்னிக்க மாட்டோம். அப்பகுதியில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு அதிகம் இருக்கிறது. அதை அடையாளம் காண மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன். அஸ்ஸாமின் அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் எந்தவொரு கூறுபாட்டிற்கும் சட்டங்கள் மூலம் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்” என்று கூறியுள்ளார்.
பார்பிதா (Barbhitha) தொகுதி காங்கிரஸ் எம்.பி அப்துல் காலிக், (Abdul Khaleque), “காவல் நிலையம் மீதான தாக்குதலை நாங்கள் ஒருபோதும் ஆதாரிக்கவில்லை. ஆனால், தாக்குதல் நடத்தியவர்களின் வீடுகளை போலீஸார் புல்டோசர் கொண்டு இடித்தது மனித உரிமைகளை நேரடியாக மீறுவதாகும்” என்று தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகாரை தொடர்ந்து இப்போது அஸ்ஸாமிலும் பாஜக புல்டோசர் பிரசாரம் தொடங்கியுள்ளதா என்கிற கேள்வியினை முன் வைக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கடந்த 2017ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, “மாஃபியாக்கள், குற்றவாளிகளுக்குச் சொந்தமான இடங்களில் நமது புல்டோசர்கள் நடவடிக்கை எடுக்கும்” என்று அதிரடியாகப் பேசினார். அப்போது தொடங்கியது புல்டோசர் பிரசாரம். இது 2022 உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலிலும் அது எதிரொலித்தது.
உத்தரப்பிரதேசத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு, தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளின் வீட்டின் முன்பாக புல்டோசர்களை நிறுத்திவைத்தது காவல்துறை. “குற்றவாளிகளுக்குக் காலக்கெடு விதித்திருக்கிறோம். அதற்குள் சரணடையாவிட்டால், அவர்களுக்குச் சொந்தமான சொத்துகளை இடித்துத் தள்ளிவிடுவோம்’’ என்று அவர்கள் எச்சரித்தனர். இதையடுத்து, தலைமறைவாக இருந்த 50-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் சரணடைந்தார்கள். அதன் பிறகும் சரணடைய மறுப்பவர்களின் சொத்துகள் தரைமட்டமாக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது.
இதே போல் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் மத்தியப் பிரதேசத்திலும் புல்டோசர் பிரசாரத்தைப் பின்பற்றத் தொடங்கியிருக்கிறது பா.ஜ.க. மத்தியப் பிரதேசத்தின் பா.ஜ.க முதல்வரான சிவ்ராஜ் சிங் செளகான், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட சிலரின் சொத்துகளை புல்டோசர் மூலம் இடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து சிவ்ராஜ் சிங்கின் ஆதரவாளர்கள், அவரை `புல்டோசர் மாமா’ என்று செல்லமாக அழைக்கத் தொடங்கினார்கள்.