உக்ரைன் மீதான ரஷ்யா படையெடுப்பு தாக்கம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் நேரடி உரையாடல் நடத்துவார் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியாவின் தடை குறித்த கேள்விக்கு பதிலளித்த சல்லிவன், “குவாடில் உணவுப் பாதுகாப்பு உரையாடலின் தலைப்பாக இருக்கும்” என்றார்.
அவர் பேசுகையில், பைடனுக்கும் மோடிக்கும் இடையிலான உக்ரைன் பற்றிய விவாதம் புதிய உரையாடலாக இருக்காது. ரஷ்யாவின் படையெடுப்பின் தாக்கங்கள், உணவுப் பாதுகாப்புக் கவலை உட்பட உலகின் பரந்த அளவிலான கவலைகள் பற்றி ஏற்கனவே நடத்திய உரையாடலின் தொடர்ச்சியாக தான் இருக்கும்.
இந்திய அமைச்சர்கள் வாஷிங்டனுக்கு வந்தபோது, 2+2 கலந்துரையாடலின் போது நடத்தப்பட்ட சிறிய வீடியோ மீட்டிங்கில் இருவரும் சந்தித்து பேச வாய்ப்பு கிடைத்தது. எனவே, அனைத்து விவகாரங்களையும் பேச வாய்ப்புள்ளது. நிகழ்ச்சி நிரல் தவிர தனிப்பிட்ட பரிமாற்றங்களும் இருக்கும். இந்த உரையாடல் நிச்சயம் ஆக்கபூர்வமானதாகவும் நேரடியானதாகவும் இருக்கும் என்று எதிர்ப்பார்ப்பதாக கூறினார்.
மார்ச் மாதம் நடந்த மெய்நிகர் குவாட் உச்சி மாநாட்டில் மோடியுடன் பைடன் நீண்ட நேரம் கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது.
ஞாயிற்றுக்கிழமை இரவு டோக்கியோவுக்கு செல்வதற்கு முன்பு அறிக்கை வெளியிட்ட மோடி, அதிபர் பைடனுடன் இருதரப்பு சந்திப்பை நடத்துவேன். அமெரிக்காவுடனான பன்முக இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து விவாதிப்போம். பிராந்திய முன்னேற்றங்கள் மற்றும் உலகப் பிரச்சனைகள் குறித்த உரையாடலை தொடர்வோம் எனக் குறிப்பிட்டிருந்தார்.
குவாட் தலைவர்கள் பிரதமர் மோடி, அதிபர் பைடன், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, ஆஸ்திரேலியாவின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோர், இந்தோ-பசிபிக் பகுதியில் சட்டவிரோத மீன்பிடித்தலைக் கட்டுப்படுத்தும் புதிய கடல்சார் முயற்சியை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, பிராந்தியத்தில் சட்டவிரோத மீன்பிடியில் 80 முதல் 95 சதவீதத்திற்கு காரணமான சீனாவுக்கு தக்க பதிலடியாக இருக்கும் என கூறப்படுகிறது.
சிங்கப்பூர், இந்தியா மற்றும் இந்தோ-பசிபிக்கின் பிற பகுதிகளில் உள்ள கடல்சார் கண்காணிப்பு மையங்களை ஒன்றோடொன்று இணைக்க செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும். இது, அப்பகுதியில் சீனக் கப்பல்கள் சட்டவிரோதமாக மீன்பிடிப்பதைத் தடுக்கும்.
மேலும், இந்தாண்டு மார்ச் மாதம் நடைபெற்ற 14வது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டிற்கு ஜப்பான் பிரதமர் கிஷிதாவிருந்தளித்ததை மோடி தனது அறிக்கையில் நினைவு கூர்ந்தார்.
டோக்கியோவிற்கு விஜயம் செய்கையில், இந்தியா-ஜப்பான் சிறப்பு மூலோபாயம் மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை வலுப்படுத்தும் நோக்கத்துடன் உரையாடலை தொடர எதிர்நோக்குகிறேன் என குறிப்பிட்டிருந்தார்.
தற்போதைய அட்டவணையின்படி, மோடியும் கிஷிதாவும் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேச வாய்ப்புள்ளது. மேலும், இரண்டு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார தொடர்பை மேலும் வலுப்படுத்திட ஜப்பானிய வணிகத் தலைவர்களை மோடி சந்திப்பார் என தெரிகிறது.
ஜப்பானில் கிட்டத்தட்ட 40,000 இந்திய புலம்பெயர்ந்தோர் வசிக்கின்றனர். அவர்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாட ஆவலுடன் காத்திருப்பதாக மோடி கூறியுள்ளார். திங்கட்கிழமை மாலை இந்திய சமூகத்துடனான உரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது.