இன்று ஆரம்பமான 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு பரீட்சார்த்திகளின் வருகை 99 வீதமாக பதிவாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சாதாரண தரப் பரீட்சை நாடு பூராகவும் பரீட்சை நிலையங்களில் சிறப்பாக நடைபெறுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.
அனைத்து பரீட்சை மத்திய நிலையங்களிலும் இன்று காலை உரிய நேரத்தில் பரீட்சைகள் ஆரம்பமாகியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இம்முறை, நான்கு லட்சத்து ஏழாயிரத்து 129 பாடசாலை பரீட்சார்த்திகளும், ஒரு லட்சத்து பத்தாயிரத்து 367 தனியார் பரீட்சாத்திகளும் பரீட்சையில் தோற்றுகின்றனர். மூவாயிரத்து 844 பரீட்சை நிலையங்களும், 542 ஒருங்கிணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. பரீட்சை கடமைகளுக்காக 25 ஆயிரம் கல்வி சார் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இதேவேளை, பரீட்சை கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எரிபொருள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதற்காக, மாகாண ஆளுனர்களுக்கு விசேட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சை கடமைகளுக்கு செல்பவர்கள் தமது தொழில் அடையாள அட்டை, பரீட்சை கடமைக்காக வழங்கப்பட்ட கடிதம் என்பவற்றை பயன்படுத்த முடியும். மாணவர்கள் தமது பரீட்சை அனுமதி அட்டையை காண்பித்து எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பரீட்சை எழுதும் மாணவர்கள், பரீட்சை கடமைகளுக்குச் செல்லும் அதிகாரிகளுக்கு எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் முன்னுரிமை வழங்குமாறும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அனைத்து தரப்பினரையும் கேட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பரீட்சார்த்திகளுக்குப் பரீட்சை நிலையங்களுக்குச் செல்வதில் இடையூறு நிலவுமாயின், அது குறித்து முறையிடலாம். இதற்காக, 0112 784 208, 0112 784 537 என்ற தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்புகொண்டு அறிவிக்க முடியும்.
அத்துடன், 1911 என்ற துரித அழைப்பிலக்கத்திற்கும் அறிவிக்கலாம். அல்லது, மாகாண அல்லது வலய கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவிக்க முடியும் என்று பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.