சுதந்திரமான இந்தோ-பசிபிக் பகுதியை உருவாக்க இந்தியா ஜப்பான் கூட்டு நடவடிக்கை- பிரதமர் மோடி உறுதி

டோக்கியோ:
குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்ற பிரதமர் மோடிக்கு டோக்கியோவில் இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.   
இந்நிலையில், ஜப்பான் முன்னணி நாளிதழில் ஒன்றில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவும் ஜப்பானும் சுதந்திரமான இந்தோ-பசிபிக் பகுதியை உருவாக்க இணைந்து செயல்படுவதாக கூறியுள்ளார்.
பாதுகாப்பான இந்தோ-பசிபிக் பகுதிக்கு இரண்டு ஜனநாயக நாடுகளும் முக்கிய தூண்களாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த பகுதியில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சீனா, பல நாடுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
தைவான், பிலிப்பைன்ஸ், புருனே, மலேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் உரிமை கோரினாலும், சீன அரசு சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் முழுவதையும் உரிமை கொண்டாடுகிறது,  தென் சீனக் கடலில் செயற்கைத் தீவுகளையும் ராணுவ தளங்களையும் சீனா கட்டியுள்ளது, கிழக்கு சீனக் கடல் பகுதி தொடர்பாக ஜப்பானுடன் சீனா மோதலில் ஈடுபட்டுள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
பின்னர் தமது டுவிட்டர் பதிவில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளதாவது:
கொரோனாவுக்கு பிந்தைய உலகில் இந்தியா-ஜப்பான் இடையேயான நெருக்கமான ஒத்துழைப்பு இன்றியமையாதது. நமது நாடுகள் ஜனநாயக நம்பிக்கையில் உறுதியாக உள்ளன. 
பலதரப்பு துறைகளில் நாங்கள் நெருக்கமாக பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். குஜராத் முதல்வராக இருந்த நாட்களில் இருந்து ஜப்பானிய மக்களுடன் தொடர்ந்து உரையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. 
ஜப்பானின் வளர்ச்சி முன்னேற்றங்கள் எப்போதும் போற்றத்தக்கவை. உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம்,  ஸ்டார்ட்-அப்கள் மற்றும் பல முக்கிய துறைகளில் ஜப்பான் இந்தியாவுடன் கூட்டு சேர்ந்துள்ளது
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.