`அண்ணாத்த’ சிவா – சூர்யா இணையும் படம் வருகிற ஜூலையில் துவங்குகிறது என்றும், இது `கே.ஜி.எஃப்’ போல பீரியட் படம் என்றும் தகவல்கள் வைரலாகி வருகின்றன. இதன் உண்மைத் தன்மை குறித்து விசாரித்தோம்.
சூர்யா இப்போது பாலாவின் இயக்கத்தில் நடித்து வருகிறார். அதன் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு கன்னியாகுமரி, ராமேஸ்வரம் ஆகிய கடலோர பகுதிகளில் நடந்து முடிந்தது. இதன் அடுத்த ஷெட்யூல் கோவாவில் விரைவில் துவங்கவிருக்கிறது.
ரஜினியின் ‘அண்ணாத்த’ படம் வெளியான சூட்டோடு சிவாவின் படம் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்குள் பாலாவின் பட அறிவிப்பும், வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்தின் டெஸ்ட் ஷுட்டும் நடந்தது. பாலா படத்தை முடித்துவிட்டு வெற்றிமாறனின் படத்திற்கு செல்கிறார் சூர்யா என்ற பேச்சும் எழுந்த நிலையில்தான் சிவா படம் குறித்த செய்திகள் தற்போது வெளியாகியிருக்கின்றன.
இது குறித்து சூர்யா, சிவா இருவரின் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்த போது, “சிவாவின் இயக்கத்தில் சூர்யா நடிப்பது உறுதிதான். இப்போதைய நிலவரப்படி ஜூலையில் படப்பிடிப்பைத் துவக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்தக் கதை ஒரு பீரியட் படம் என்ற தகவலும் உண்மைதான். இதுவும் ஒரு பான் இந்தியா படமாக உருவாகலாம் என்றாலும் ‘கே.ஜி.எஃப்’யை இதனுடன் ஒப்பிட வேண்டாம் என்றும் சொல்கிறார்கள்.
இன்னொரு ஸ்பெஷல். ஜூலை 23ல் சூர்யாவின் பிறந்தநாள் வருகிறது. எனவே சிவாவின் படத்தை அன்று துவக்கவும், பாலா – சூர்யாவின் பட டைட்டில், ஃபர்ஸ்ட் லுக்கை அன்று வெளியிடவும் திட்டமிட்டு வருகிறார்கள்” என்றும் சொல்கிறார்கள்.