டி. ராஜேந்தரின் குடும்பப் படம். ஸாரி குடும்பப் பாங்கான படம்!
மூன்று சகோதரிகள், ஒரு தம்பி என்று மெகா சீரியல் பாணி குடும்பத்தில் பிறந்த ரோஜாதான் குடும்பத்தின் வருமானத் தூண். குடிகார அப்பா மணிவண்ணன், அக்காவின் மானங்கெட்ட கணவனான வடிவேலு என்று கூட்டுக் குடும்பச் சிக்கல்கள்.
போதாதென்று விரட்டி விரட்டிக் காதலிக்கும் சக ஊழியர் முரளி.
இப்படி பிரச்னை முட்களுக்கிடையே மலர்ந்து நிற்கிறது ரோஜாவின் வாழ்க்கை பத்திரிகையாளர்-கம்- பாடலாசிரியர்-கம்-காதல்குரு-கம்-ஆர்க்கெஸ்ட்ரா நடத்துபவராகப் படத்திலும் ஒரு பலகலைப் பிரமுகராக டி. ராஜேந்தர்.
இவரது தங்கை சுவாதியைக் கைப்பிடித்த இன்ஸ்பெக்டர் கரணின் வீடு வில்லி ராஜ்யமாக மாற. அங்கேயும் ஒரு பாசப்போராட்டம்- இது சைடு டிராக்.
காதலின் ஆழத்தையும் அழுத்தத்தையும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்று கோதாவில் இறங்கியிருக்கிறார் டி.ஆர். ஆனால், ஜிகினா டிரஸ். பளபள செட் என்று மாறாத ஃபார்முலாதான் படம் முழுக்கப் பயமுறுத்துகிற விஷயம்!
குடிகார ஆட்டோக்காரராக வந்து படம் முழுக்க ஆட்டம் போடுகிற வடிவேலுவின் அலம்பல் தாங்க முடியவில்லை என்றால், அவரை அடக்க வழி தெரியாமல் மனைவி கோவை சரளாவும் குடித்துவிட்டுக் கலாட்டா செய்வது டூமச்!
ரம்மை ரம்மால் திருத்துகிற புது உத்தி போலிருக்கிறது. சோகத்தில் குழைகிற நெகிழ்ச்சியான நடிப்பு, கோபத்தில் குதிக்கிற ஸ்பிரிங் போன்ற துடிப்பு என்று தலை முடி டான்ஸ் ஆட ராஜேந்தர் டயலாக் பேசுகிற எல்லா இடமும் நம்மைப் புன்முறுவல் பூக்க வைக்கிறது.
டி.வியிலும் சினிமாவிலும் ஏற்கெனவே அறிமுகமான மாத நாவல் டைப் ஹீரோயினாக ரோஜா புதுமையான முயற்சிகள் ஏதும் பண்ணாமல், பட்டன்குடை, காட்டன் சேலையில் எந்நேரமும் எரிச்சலோடு அலைகிறார்.
சுமார் இருபது படங்களிலாவது காதலைச் சொல்ல முடியாமல் தவித்த முரளிக்கு, இதில் முதல் ரீலில் ஆரம்பித்துக் காதலைச் சொல்லிச் சொல்லித் துரத்துகிற மாதிரி ஒரு காரெக்டர்.
மனிதர் துன்புறுத்துகிறார் – ரோஜாவை மட்டுமல்ல!
படத்துக்கு எந்த விதத்திலும் சம்பந்தமே இல்லாமல் சிலம்பரசன் இரண்டு டான்ஸ் போடுகிறார்.
அதை ஒரு சினிமா ஷூட்டிங் என்று காட்டிச் சமாளிக்கிறார்கள்! – தான் பங்கெடுத்துக் கொண்ட எல்லாத் துறைகளிலுமே டி.ஆர் எங்காவது ஓரிரண்டு இடத்தில் ‘சபாஷ்’ பெறுகிறார்.
ஆனால் ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் எதுவும் மனதில் நிற்கவில்லை.
– விகடன் விமரிசனக்குழு
(03.06.2001 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் இருந்து…)