தனியார் கட்டுமான நிறுவனத்தை மிரட்டி, மாதம்தோறும், 50 லட்சம் ரூபாய் வசூலிக்க முயன்றதாக, 53 வயது நபரை மயிலாப்பூர் காவல் துறையினர் கைது செய்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த கெவின் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எஃப்ஐஆரில், அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், யூடியூபர் மாரிதாஸ் மற்றும் பிரபல தமிழ் இதழின் நிருபர், ஆசிரியர், பங்குதாரர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
ஜி ஸ்கொயர் நிர்வாகி புருஷோத்தம் குமார் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் மனுவில், கெவின் தனது முதலாளி ராமஜெயம் என்கிற பாலாவை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தொல்லை செய்துள்ளார். மாதந்தோறும் ரூ50 லட்சம் தந்துவிட்டால், உங்கள் நிறுவனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனுடன் இணைத்து கட்டுரை வெளியிடுவதை நிறுத்திவிடுவோம். இல்லையெனில், அவதூறான கட்டுரைகள் எழுதப்படும் என மிரட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.
காவல் துறை வட்டாரங்கள் கூற்றுப்படி, கெவின் மாதந்தோறும் ரூ. 50 லட்சம் தர வேண்டும் என ராமஜெயத்தை மிரட்டியுள்ளார். பணம் தராவிட்டால், சவுக்கு சங்கர் மற்றும் மாரிதாஸ் மூலம் உன்னை தற்கொலைக்கு தூண்டும் அளவிற்கு சமூக வலைதளத்தில் பொய்யான கூற்றை பரப்புவேன் என கூறியுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சில ஆதாராங்கள் கிடைத்ததையடுத்து. வழக்குப் பதிவு செய்து கெவின் கைது செய்யப்பட்டார். விசாரணையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட ஒரு நாள் கழித்து, ஞாயிற்றுக்கிழமை காலை கெவின் அவரது வீட்டில் இருந்து அழைத்து வரப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, கெவின் மற்றும் அவரது குடும்பத்தினரின் மொபைல் போன்கள், மடிக்கணினிகள் மற்றும் பென் டிரைவ்களை போலீசார் கைப்பற்றியதாகவும் சொல்லப்படுகிறது.இந்த தகவல் இதுவரை உறுதிசெய்யப்படவில்லை.
மெரினா காவல்நிலையத்தில் கெவினிடம் விசாரணை நடத்திய பிறகு, அவர் சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.
இதுதொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” காவல்துறையில் புகார் கொடுத்துள்ள ஜி ஸ்கொயர் நிறுவனம் தங்களைப் பற்றிய செய்தி வெளியிட்டதற்காக ஜூனியர் விகடன் மீது ஏற்கெனவே வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு விகடன் நிறுவனமும் பதிலளித்திருக்கும் நிலையில் அதே உள்ளடக்கத்தை கொஞ்சம் கூடுதலாக புகாரைச் சேர்த்து காவல் துறையிடம் வழங்கியுள்ளனர்.
புகாரின் உண்மையை முழுமையாக விசாரித்து அறியாமல் வேகவேகமாக ஜூனியர் விகடன் நிறுவன இயக்குநர்கள், ஊடகவியலாளர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்திருப்பது இதன் பின்னணி குறித்து கேள்விகளை எழுப்புகிறது. இந்த பொய்ப்புகாரை வழக்காக பதிவு செய்து ஊடகங்களை மிரட்டும் போக்கு கண்டனத்துக்கு உரியது.
இரவு 9 மணிக்கு புகார் பெறப்பட்டு, இரவு 2 மணிக்கு உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, இரவே கைது நடந்துள்ளது. மேலும், புகாரில், 3வது குற்றவாளியாக ஜூனியர் விகடனோடு சம்பந்தப்பட்டவர்கள் என்பது, விகடன் குழுமத்தின் உரிமையாளர் முதல் அந்த அலுவலகத்தில் பணியாற்றும் ஓட்டுனர் வரை அனைவரையும் கைது செய்ய, காவல் துறைக்கு உரிமை வழங்கியுள்ளது.
ஜூனியர் விகடன் பெயரை கூறி ஜி ஸ்கொயர் நிறுவனத்தை யாராவது மிரட்டினால், அந்நிறுவனத்தினர் விகடன் நிறுவனத்தை அணுகி தெளிவு பெற்றிருக்கலாம். அது உண்மையா என்றும் விசாரித்திருக்கலாம். ஆனால், காவல் துறையில் ஜி ஸ்கொயர் புகார் அளிப்பதும், இரவோடு இரவாக, மின்னல் வேகத்தில் சென்னை மாநகர காவல் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதும், ஆளும் கட்சிக்கு எதிராக செய்தி வெளியிடும் பத்திரிக்கையாளர்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கையாகவே கருத வேண்டியுள்ளது.
ஊடகங்களுடன் நல்லுறவு பேணும் தமிழக முதல்வரின் கவனத்திற்கு இந்த வழக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்காது என்று நம்புகிறோம். ஊடக சுதந்திரத்தை மதிக்கும் முதலமைச்சர் உடனடியாகத் தலையிட சென்னை பத்திரிகையாளர் மன்றம் வேண்டுகிறது.பத்திரிகைகள் ஊடகங்கள் மீது போடப்படும் பொய்வழக்குகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கருத்து சுதந்திரத்தில் நம்பிக்கையை கொண்டவர்கள் நன்கறிவார்கள். கருத்து சுதந்திரத்தை நசுக்கும் அநீதியை கண்டிப்போம். ஊடக சுதந்திரத்துக்காக உரத்த குரல் கொடுப்போம்.பத்திரிகை சுதந்திரம் ஓங்குக” என குறிப்பிடப்பட்டுள்ளது.