ஜூனியர் விகடனுக்கு எதிராக, ரியல் எஸ்டேட் நிறுவனமான ‘ஜி ஸ்கொயர்’ புகார் ஒன்றை அளித்திருந்தது. கெவின் என்பவர் ஜூனியர் விகடன் பெயரைச் சொல்லி பணம் கேட்டு மிரட்டுவதாக அந்தப் புகாரில் ‘ஜி ஸ்கொயர்’ கூறியிருந்தது. இந்தப் புகாரில் மாரிதாஸ், சவுக்கு சங்கர் ஆகியோரும் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். புகாரின் அடிப்படையில், வழக்கு பதியப்பட்டு கெவின் என்பவர் மைலாப்பூர் போலீஸாரால் மே 22-ம் தேதி அதிகாலை 2 மணியளவில் கைது செய்யப்பட்டார். ‘ஜி ஸ்கொயர்’ புகாரை முற்றிலுமாக ஜூனியர் விகடன் மறுத்திருக்கிறது.
சம்பந்தப்பட்ட நிறுவனம் பிப்ரவரி 3-ம் தேதி வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியபோது, இந்தக் குற்றச்சாட்டுகளையெல்லாம் மறுத்து பிப்ரவரி 7-ம் தேதி ஜூனியர் விகடன் சார்பில் பதில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. “புகாரில் கூறப்பட்டிருக்கும் கெவின் என்பவர் பற்றி மேலதிக தகவல் தந்தால், அவர்மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம்” எனவும் விகடன் சார்பில் கூறப்பட்டது. இந்த நோட்டீஸுக்கு இதுவரை எந்த பதிலும் கிடைக்கப்பெறாத நிலையில்தான், இந்த வழக்கு பதியப்பட்டிருக்கிறது. இதில் ஜூனியர் விகடனையும் சேர்த்திருப்பது பத்திரிக்கை சுதந்திரத்துக்கு விடப்பட்ட சவாலாகவே பார்க்கப்படுகிறது.
இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.
இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விடுத்திருக்கும் அறிக்கையில், “இந்த பொய் புகாரை வழக்காகப் பதிவு செய்து ஊடகங்களை மிரட்டும் போக்கு கண்டனத்திற்குரியது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, பத்திரிக்கை சுதந்திரம் கருத்துச் சுதந்திரம் என்று வாய்கிழியப் பேசிய இன்றைய ஆட்சியாளர்கள், அதிகார மமதையின் உச்சத்துக்கே சென்றுவிட்டனர். தாங்கள் செய்யும் தவறுகளை எந்த ஊடகமும் மக்களுக்குக் கொண்டு சேர்க்காமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென காவல்துறைக்கு இந்த அரசு உத்தரவிட்டிருப்பது போலத் தெரிகிறது.
காவல்துறை அதிகாரிகள் தங்களிடம் கொடுக்கப்பட்ட புகாரை விசாரித்து உண்மைத் தன்மையை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு தி.மு.க-வுக்கு வேண்டப்பட்டவர்கள் என்பதால், வழக்கு பதிவு செய்த உடனேயே கைது செய்வது கண்டிக்கத்தக்கது. இதற்குத் தமிழக மக்கள் விரைவில் சம்மட்டி அடி கொடுப்பார்கள் என்று எச்சரிக்கிறேன்” என்றிருக்கிறார்.
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விடுத்திருக்கும் அறிக்கையில், “ஆளும் கட்சியின் அதிகாரம் மிக்க குடும்பத்தினருக்கும், ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கும் நெருங்கிய தொடர்பிருப்பது ஊரறிந்த ரகசியம். ஈ.சி.ஆர் சாலைக்கு `ஜி ஸ்கொயர்’ சாலை என்று பெயர் சூட்டியிருக்கலாம் என்றுகூட ஒருமுறை குறிப்பிட்டிருந்தேன். தமிழகத்தில் நிலம் மற்றும் மனை விற்பனையாளர்கள் தற்போது எந்த பத்திரப்பதிவும் மேற்கொள்ள முடியாத இருண்ட சூழ்நிலையில் முடக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் `ஜி ஸ்கொயர்’ நிறுவனத்தின் பத்திரப்பதிவு மட்டும் கனஜோராக நடைபெறுகிறது.
இந்த நிலையில் ஜி ஸ்கொயர் நிறுவனம், ஜூனியர் விகடன் பத்திரிகை மீதும், ஊடகவியலாளர்கள் சகோதரர் மாரிதாஸ், சவுக்கு சங்கர் ஆகியோர் மீதும் கூட்டாக ஒரு வழக்கை பதிவு செய்கிறது. அவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதற்கு எத்தனையோ சிவில் சட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. ஆனால் வேண்டுமென்றே அவர்களைச் சிக்க வைப்பதற்காக கிரிமினல் வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனம் வழக்கு பதிவு செய்கிறது. புகாரின் உண்மைத் தன்மையை அறியாமல், அது குறித்து எந்தவிதமான விசாரணையும் நடத்தாமல், இரவோடு இரவாக நடவடிக்கை எடுத்து எவரையும் கைது செய்யும் வகையில் வழக்கை அமைத்திருப்பது என்பது, பத்திரிகைகளை, ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் செயலாகும். அதிகார போதையின் உச்சத்தில், ஊடகங்களை அழுத்தலாம், அச்சுறுத்தலாம் என்று ஆளும் தி.மு.க அரசு நினைக்கும் என்றால், அதை மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்” என்றிருக்கிறார்.
நாம் தமிழர் கட்சியின் சீமான், “ஆட்சிக்கு வந்த கடந்த ஓராண்டுக் காலத்தில் தமக்கு எதிராகக் கருத்துகளைப் பகிரும் ஊடகவியலாளர்களையும், எதிர்க்கட்சியினரையும் பொய் வழக்குகள் மூலம் ஒடுக்க நினைக்கும் தி.மு.க அரசின் எதேச்சதிகாரப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.
ஜி ஸ்கொயர் என்கிற தனியார் நிலவிற்பனை நிறுவனம் செய்யும் அதிகார அத்துமீறல்கள் குறித்த உண்மைகளை வெளியிட்டடற்காக ஜூனியர் விகடன் இதழ்மீது, தொடர்புடைய நிறுவனம் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொய் வழக்கு புனையப்பட்டிருக்கிறது. புகாரின் உண்மையை முழுமையாக விசாரித்து அறியாமல் வேகவேகமாக ஜூனியர் விகடன் நிறுவன இயக்குநர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சவுக்கு சங்கர், மாரிதாஸ் ஆகியோர் மீதும், புகாரளிக்கப்பட்ட 5 மணி நேரத்துக்குள் சென்னை மாநகரக் காவல்துறை வழக்கு பதிவு செய்திருப்பதும், கைது நடவடிக்கையைத் துரிதப்படுத்துவதும் இதன் பின்னணியிலிருக்கும் ஆளும் அதிகார மையங்களின் அரசியல் அழுத்தத்தினை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
பொய் புகாரை வழக்காக பதிவுசெய்து ஊடகங்களை மிரட்டுவதன் மூலம் தனது அரசுக்கும், அதன் செல்வாக்குமிக்க அதிகார மையங்களுக்கும் எதிராக எவரும் எதிர்க்கருத்தோ, விமர்சனமோ செய்துவிடக்கூடாது என்ற தி.மு.க-வின் எதேச்சதிகார மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. உண்மையிலேயே தி.மு.க அரசுக்கு ஜனநாயகத்தின் மீதும், கருத்துச் சுதந்திரத்தின் மீதும் அணுவளவாது அக்கறை இருக்குமாயின் ஜூனியர் விகடன் உள்ளிட்ட ஊடகங்கள் மீதும், சமூக ஊடகவியலாளர்கள் மீதும் போடப்பட்டிருக்கும் பொய் வழக்கை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்” என்றிருக்கிறார்.