புதுடெல்லி: டெல்லியில் இன்று அதிகாலை பலத்த காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக, அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலெர்ட் கொடுத்திருந்த நிலையில், டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை சூறைக்காற்றுடன் முதல் பெய்த கனமழையின் காரணமாக டெல்லியின் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசியதால், பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
இந்த திடீர் மழையின் காரணமாக, நிலவும் மோசமான வானிலையால், டெல்லியில் உள்ள இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில், விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகள் சம்பந்தப்பட்ட விமான சேவை நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு விமான சேவை குறித்த தகவல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று டெல்லி விமான நிலையம் அறிவித்துள்ளது.
மேலும், பலத்த காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக, டெல்லி முழுவதும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், நகரின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தரைக்காற்று வீச வாய்ப்பு: டெல்லியில் காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ள நிலையில், 60 கி.மீட்டர் முதல் 80 கி.மீட்டர் வரை தரைக்காற்று வீச வாய்ப்புள்ளதாகவும், ஜம்மு – காஷ்மீர், பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
குளிர்வித்த மழை: டெல்லி முழுவதும் கடந்த சில நாட்களாக வெப்பநிலை உயர்ந்து, மக்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் அவதியுற்று வந்தனர். கடந்த இரு வாரங்களுக்கு முன்பே, கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை பெய்த கனமழையின் காரணமாக டெல்லி முழுவதும் குளுமையான சூழல் நிலவி வருகிறது.