மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் சுமந்து செல்வதற்கு தடை விதிக்கக்கோரி, சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தருமபுரம் ஆதீனத்தில் இன்று பட்டினப்பிரவேச நிகழ்ச்சி நடத்துவதற்கு கோட்டாட்சியர் ஏற்கனவே தடை விதித்ததால் சர்ச்சை எழுந்தது. பின்னர் அந்த தடை உத்தரவை திரும்பப் பெறப்பட்டது.
இதனை அடுத்து பட்டணப் பிரவேச நிகழ்ச்சி கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று நாற்காலி பல்லக்கில் தருமபுரம் ஆதீனம் உலா வந்தார்.
முக்கிய நிகழ்ச்சியான பட்டினப்பிரவேசம் இன்று நடைபெற உள்ளது. இதனை ஒட்டி திருமடம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், மக்கள் அதிகாரம் இயக்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி, பறையடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மனிதரை மனிதரே தூக்கும் செயல் என்பது மனித உரிமை மீறல் என்று மக்கள் அதிகாரம் அமைப்பு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தது.
மேலும் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், தர்மபுரம் ஆதீன சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும் எனவும் அந்த அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.
அப்போது, அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தப்பட்டதால், இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.