தாலி கட்டும் நேரத்தில் மயக்கம்: திருமணத்தை நிறுத்திய இளம்பெண்| Dinamalar

மைசூரு : தாலி கட்டும் நேரத்தில் தனக்கு திருமணம் வேண்டாம்; காதலனையே திருமணம் செய்வதாக மணப்பெண் கூறியதால் திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மைசூரின் சுன்னகேரியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும், எச்.டி.கோட்டே அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது; மைசூரில் உள்ள வித்யா பாரதி கல்யாண மண்டபத்தில் நேற்று திருமணம் நடப்பதாக இருந்தது. இதற்காக இரு தரப்பு பெற்றோர் மற்றும் உறவினர்கள் மண்டபத்தில் கூடினர்.நேற்று முன்தினம் இரவு சடங்குகள் முடிந்தது; நேற்று காலை, தாலி கட்டும் வைபவத்துக்கு தயாராகினர். தாலி கட்டும் நேரத்தில் மணமகள் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக பதறிய உறவினர்கள்

தண்ணீர் தெளித்து மயக்கத்தை போக்கினர்.அப்போது, மணமகள், எனக்கு இந்த திருமணம் வேண்டாம்; என் காதலனையே திருமணம் செய்து கொள்கிறேன்’ என்றார். இதன் பின்னர் தான், மணமகள் நாடகமாடியது தெரியவந்தது. மணமகன் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர்.மணமகளுக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபருக்கும் காதல் இருந்ததும், பெற்றோர் வலுக்கட்டாயமாக திருமணம் ஏற்பாடு செய்ததும் தெரியவந்தது. பெண் பார்க்கும் படலம் முதல், நிச்சயதார்த்தம் வரை மணப்பெண் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து இருந்தாராம்.

அதன்பின், காதலன் ‘இந்த திருமணத்தை நிறுத்து’, என வாட்ஸ் ஆப்பில் தகவல் அனுப்பிய பின், அப்பெண் மனம் மாறி விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்த பெண்ணின் பெற்றோர் கேட்ட போதும் அவர் மறுத்தாராம்.தகவல் அறிந்து வந்த போலீசார், மணமகள் உட்பட இரு தரப்பு வீட்டினரையும் கே.ஆர்.போலீஸ் நிலையம் அழைத்து சென்று பேச்சு நடத்தினர்.

அப்போது மணமகன் குடும்பத்தார், மணமகளுக்கு தங்க நகை, பட்டு புடவை என திருமணத்துக்காக 5 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளோம்’ என்றனர். இந்த தொகையை மணமகள் குடும்பத்தார் கொடுத்ததை தொடர்ந்து சுமுக தீர்வு ஏற்பட்டது. இரு தரப்பினரும் புகார் அளிக்காமல் திரும்பி சென்றனர்.மணமகளை அவரது பெற்றோர் வீட்டுக்கு அழைத்து செல்லாமல் போலீஸ் நிலையத்திலேயே விட்டு சென்றனர். பின், அவரது சகோதரர் வந்து ஆட்டோவில் அழைத்து சென்றார்.மணமகன் வீட்டார் கூறியதாவது:

எங்கள் மகனுக்கு பெண் பார்க்கும் போது, உறவினர் ஒருவர் தான், இந்த சம்பந்தம் குறித்து தெரிவித்தார். முன்னதாக அந்த பெண்ணுக்கு ஏற்கனவே நிச்சயமாகி, கடைசி நேரத்தில் மணமகன் வேண்டாம் என கூறியதால் திருமணம் நின்றதாக கூறினர்.நாங்கள் பெண் பார்க்க செல்லும் போது, அந்த பெண் எங்களிடம் சரியாக கூட முகம் கொடுத்து பேசவில்லை. இதனால் திருமணத்தில் விருப்பம் இல்லையா என கேட்டோம். அதற்கு அவரது பெற்றோர், ஏற்கனவே திருமணம் நின்றதால் விரக்தியில் உள்ளார் என்றனர்.அதன்பிறகு நிச்சயதார்த்தத்தின் போதும் பெண்ணிடம் கேட்டோம்; உங்கள் மகனை பிடித்திருக்கிறது என்றார். நாங்கள் மொபைல் போன் வாங்கி கொடுத்தோம்; அதையும் வாங்கி கொண்டார். கடைசி வரை விருப்பமில்லை என அவர் கூறவில்லை. தாலி கட்டும் நேரத்தில் ஏமாற்றி விட்டார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.