க.சண்முகவடிவேல்.
திருவெறும்பூர் அருகே உள்ள நொச்சிவயல் புதூர் பகுதியில் வசித்து வரும் ஆனந்தன் மகள் வித்யா லட்சுமி (19). இவர் திருச்சியில் பிரபலமான கல்லூரி ஒன்றில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் மர்ம நபர்கள் 3 பேர் கடந்த வாரம் இவரது வாயில் குளிர்பானத்தில் விஷம் கலந்து ஊற்றி விட்டதாகக் கூறி திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் வித்யா. சிகிச்சை பலனின்றி வித்யா நேற்று பரிதாபமாக இறந்து விட்டார். இந்தக்கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட 3 பேர் மீதும் பெல் நிறுவன போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
வித்யா கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் மூன்று பேரையும் போலீஸார் இதுவரை கைது செய்யவில்லை எனக்கூறி அவரது குடும்பத்தினர் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் குதித்தனர். இவர்களுடன் நொச்சிவயல் புதூர் கிராமம் மற்றும் மலைக்கோயில் பகுதியில் உள்ள கிராம பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த திருவெறும்பூர் டிஎஸ்பி பொறுப்பு ஜெயசீலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்படாததால், பொதுமக்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதில் பொதுமக்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் திருச்சி தஞ்சை சாலை போக்குவரத்து 1 மணி நேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டதால் நீண்ட வரிசையில் வாகனங்கள் வரிசை கட்டியதால் திருச்சி-தஞ்சை சாலையின் இரு மார்க்கத்திலும் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இந்த தடியடியின்போது நவல்பட்டு காவல் ஆய்வாளர் தரக்குறைவாக நடந்துகொண்டதாக கூறிய இளம்பெண்ணின் பெற்றோர் போலீஸாரைக் கண்டித்து வீட்டு வாசலில் மீண்டும் போராட்டத்தை துவக்கினர். பின்னர் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் மற்றும் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெற்றோரிடம் பேசி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் கொடுக்க வேண்டும், உடனடியாக அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும். போராட்டம் நடத்தியபோது ஆபாசமாக பேசிய நவல்பட்டு இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே வித்யா லட்சுமியின் உடலை வாங்குவோம். இல்லை என்றால் அது வரை போராட்டம் தொடரும் என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த அதிமுக, பாஜக, புதிய தமிழகம், திமுக, கம்யூனிஸ்ட், தமிழக தேவேந்திரகுலவேளாளர் நலச்சங்கம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்களும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவாக தாசில்தாரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். போராட்டக்காரர்களிடம் திருவெறும்பூர் தாசில்தார் ரமேஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார். சாலை மறியல் போராட்டம், காத்திருப்பு போராட்டம் போன்ற பல்வேறு போராட்டங்களால் திருவெறும்பூர் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கின்றது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil