ஆழ்துளை கிணற்றில் 100 அடி ஆழத்தில் தவறி விழுந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் உள்ள கியாலா கிராமத்தில் ரித்திக் எனும் ஆறு வயது சிறுவன் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அவனை தெரு நாய்கள் துரத்தி உள்ளன. பயந்து ஓடிய சிறுவன் சணல் பையால் மூடப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றின்மேல் ஏறி நின்றுள்ளான். சிறுவனின் எடை தாங்காமல் சணல் பை அறுந்ததில், சிறுவன் ஆழ்துளை கிணற்றில் 100 அடி ஆழத்திற்குச் சென்றுள்ளான்.
தகவல் அறிந்து அங்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப்படை மற்றும் இந்திய ராணுவத்தைச் சேர்ந்தவர்கள், குழந்தையை மீட்கும் முயற்சிகளை மேற்கொண்டனர். குழந்தைக்குப் போதுமான காற்றோட்ட வசதி கிடைக்க ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது. தவிர குழந்தையை மீட்க ஆழ்துளை கிணற்றுக்கு இணையாக ஒரு சுரங்கப்பாதையும் தோண்டப்பட்டது.
அவசர சேவைக்காக மருத்துவ குழுவினரும் அங்கு விரைந்தனர். பல மணி நேரத்துக்குப் பிறகு சிறுவன் மீட்கப்பட்டான். குழந்தை மீட்கப்பட்டபோது சுயநினைவின்றி இருந்ததால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளான். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளான்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சர் பகவந்த் மான், “ஹோஷியார்பூரைச் சேர்ந்த 6 வயது சிறுவன் ரித்திக் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து இறந்துள்ளான். கடவுள் அவனின் குடும்பத்தாருக்கு வலிமையைத் தரட்டும். குடும்பத்தாரின் இழப்பை ஈடு செய்ய முடியாது. இந்த துக்க நேரத்தில் நாங்கள் அவர்களுடன் இருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ள அவர், உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க அறிவுறுத்தி உள்ளதாகப் பதிவிட்டுள்ளார்.