நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள பயன்படுத்தப்படாத அனைத்து காணிகளையும் பயிர் செய்கைக்காக பயன்படுத்துமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவு நெருக்கடிக்கு தீர்வாக இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், எந்தவொரு நிறுவனத்திற்கும் வெற்று நிலம் இருக்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
முதலீட்டிற்காக ஒதுக்கப்பட்ட காணிகள் இதுவரையிலும் பயன்படுத்தப்படாவிடின் காணிகளை உடனடியாக மீளப் பெற்று புதிய முதலீட்டாளர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
முதலீட்டிற்காக காணிகளை ஒதுக்கீடு செய்யும் போது உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் விளம்பரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலைமை சீராகும் வரை தற்போது திட்டமிடப்பட்டுள்ள புதிய திட்டங்களை இடைநிறுத்துமாறு பணிப்புரை விடுத்த அமைச்சர், அடுத்த வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் வரை அமைச்சின் அத்தியாவசிய விடயங்களுக்கு மாத்திரம் நிதி ஒதுக்குமாறும் .தெரிவித்தார்.
இதேவேளை, அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நகரில் உள்ள அனைத்து வெற்றுக் காணிகளிலும் விவசாயம் செய்வதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்