பெங்களூரு : கடன் கொடுப்பதாக, லாட்டரி அடித்துள்ளதாக பொதுமக்களை ஏமாற்றி, பணம் பெற்று மோசடி செய்த ஆப்ரிக்க நாட்டு வாலிபரை, சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.ஆப்பிரிக்காவின், பானாவைச் சேர்ந்தவர் சாமுவல் ஒகோன், 26; பெங்களூரில் வசிக்கிறார். திரிபுரா, அசாம், நாகாலாந்து, மிஜோரம், சிக்கிம், அருணாச்சல் பிரதேசம், மேகாலயா, மணிப்பூர் உட்பட வட கிழக்கு மாநில மக்கள் சிலருக்கு பணம் கொடுத்து, அவர்களின் பெயரில் வங்கி கணக்கு திறந்தார்.
அவர்களின் பெயரிலேயே சிம் கார்டுகளும் வாங்கினார்.வங்கியின் டெபிட் கார்டுகளை கூரியர் மூலம் பெங்களூருக்கு வரவழைத்தார். அந்த சிம் கார்டுகள், வங்கி கணக்குகளை பயன்படுத்தி மோசடி வேலையில் ஈடுபட்டார். கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் சிலரை தொடர்பு கொண்டு, வேலை கொடுப்பதாகவும், பரிசு வந்துள்ளதாகவும், லாட்டரி விழுந்துள்ளதாகவும் ஆசை வார்த்தை காண்பித்தார்.அதற்குரிய கமிஷன் வேண்டும் எனக் கூறி, அவர்களிடம் ‘ஆன்லைன்’ வழியாக, லட்சக்கணக்கில் பணம் வசூலித்துள்ளார். இவரிடம் ஏமாந்த சிலர், பெங்களூரின் வட கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.விசாரணை நடத்திய போலீசார், சாமுவல் ஒகோனை கைது செய்தனர். ஐந்து சிம் கார்டு, ஆறு டெபிட் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
Advertisement