பெங்களூரு : திருமண கோஷ்டியினர் பயணித்த வாகனம் மரத்தில் மோதியதில், பலியான ஒன்பது பேர் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும்,” என முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.தார்வாட் அருகே உள்ள மன்சூர் கிராமத்தில், இம்மாதம் 20ல் ஒரு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
மணமகள் வீட்டில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு மணமகனின் பெனகனகட்டி கிராமத்தை சேர்ந்த 21 பேர் அன்று மாலை வாகனத்தில் சென்றனர்.நிகழ்ச்சி முடிந்து நள்ளிரவு மீண்டும் அதே வாகனத்தில், அனைவரும் திருமணம் நடக்கும் மணமகன் ஊரான பெனகனகட்டி கிராமத்தில் உள்ள திருமண மண்டபத்துக்கு சென்றனர்.அதிகாலை, 2:00 மணிக்கு பாடா கிராஸ் என்ற இடத்தில் செல்லும் போது வாகனம் மரத்தில் மோதியதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.உயிரிழந்தோர் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என நேற்று மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறி இருந்தார். விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு, தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.இது குறித்து, ‘டுவிட்டரில்’ அவர் வெளியிட்ட அறிக்கை:தார்வாடின் பாடா கிராமம் அருகே நடந்த விபத்தில் உயிரிழந்த ஒன்பது பேரின் குடும்பத்துக்கு மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி வேண்டுகோளை ஏற்று, முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து தலா 5 லட்சம் ரூபாய் அளிக்கப்படும்; இந்த விபத்து மிகவும் துரதிர்ஷ்டவசமானது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு சாந்தி கிடைக்கட்டும் என பிரார்த்திக்கிறேன்.இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.
Advertisement