புதுடெல்லி: பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உதவியுடன் இந்தியாவில் உள்ள ரயில் தண்டவாளங்களை தகர்க்க திட்டமிட்டுள்ளதாக, ஒன்றிய மற்றும் மாநிலங்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள ரயில் தண்டவாளங்களில் குண்டுவெடிப்பு நடத்த பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. முக்கியமாக பஞ்சாப் மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள ரயில் பாதைகளை தகர்க்க ஐஎஸ்ஐ திட்டமிட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அதையடுத்து உளவுத்துறை, ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.இதுதொடர்பான சுற்றறிக்கையில், ‘சரக்கு போக்குவரத்தை முற்றிலும் சீர்குலைக்க, சரக்கு ரயில் ெசல்லும் தண்டவாளங்களை தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக ரயில் பாதைகளை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்தியாவில் செயல்பட்டு வரும் பாகிஸ்தானிய ஸ்லீப்பர் செல்கள், இந்த செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. அவர்களுக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு, பெருமளவில் நிதி உதவி அளித்து வருகிறது’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.