புதுச்சேரி: புதுச்சேரியில் மின்துறை தனியார் மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பாதிக்காத வகையில் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளதாக போராட்டக் குழுவினர் தெரிவித்தனர். புதிய இணைப்பு, மீட்டர் ரீடிங், எழுத்து பணிகளை முற்றிலும் புறக்கணித்தாலும் மக்களுக்கு தடையில்லாமல் மின்சாரம் தருவோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
யூனியன் பிரதேசங்களின் மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. புதுவை மின்துறை பொறியாளர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழு அமைப்பை ஏற்படுத்தி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கடந்த பிப்ரவரியில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். அவர்களோடு முதல்வர், மின்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், மின்துறை ஊழியர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கருத்துக்களை கேட்டறிந்து அனைவரும் பாதிக்காத வகையில் அரசு நல்ல முடிவெடுக்கும் என உறுதியளித்தனர். இதையேற்று போராட்டக்குழுவினர் வேலைநிறுத்த போராட்டத்தை நிறுத்தினர்.
தற்போது அரசு மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து தனியார்மய எதிர்ப்பு போராட்டக் குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
இந்தக் கூட்டத்தில், மீண்டும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்தனர். இன்று முதல் மீண்டும் அவர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். வம்பாகீரப் பாளையத்தில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்தில் மின் அலுவலகங்களை சேர்ந்த ஊழியர்கள் ஒன்று கூடினர். அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
இதுகுறித்து போராட்டக்குழு தலைவர் அருள்மொழி, பொதுச்செயலாளர் வேல்முருகன் ஆகியோர் கூறும்போது, “அரசு அளித்த வாக்குறுதியை மீறி மின்துறையை தனியார்மயமாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக அமைச்சரவை முடிவெடுத்து, மத்திய அரசுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் நாங்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்குகிறோம்.
அதேநேரத்தில் பொதுமக்களுக்கு தடையில்லாத மின்சாரத்தை வழங்குவோம். பொதுமக்களுக்கு எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் எங்கள் போராட்டம் இருக்கும். பொறியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை மட்டும் தொடர்வார்கள். கூடுதல் பணிகளை பார்க்கமாட்டார்கள். எழுத்துப் பணிகளை முற்றிலுமாக தவிர்க்கிறோம். ஹெச்டி மீட்டர் ரீடிங் எடுக்க மாட்டோம். புதிய மின் இணைப்பு தரமாட்டோம்.
அரசு எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் எங்களின் போராட்டம் தீவிரமடையும். போராட்டத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். இன்று முதல் போராட்டங்களை தொடங்கினோம். அடுத்தடுத்து அடுத்தக்கட்ட போராட்டங்களை அறிவிப்போம்” என்று அவர் தெரிவித்தார்.