தயாரிப்பாளர் கே. பாலசந்தருக்கும் டைரக்டர் அமீர்ஜானுக்கும் நன்றி எதிர்காலத்துக்கு நம்பிக்கையூட்டும் வகையில் ஒர் இளம் கதாநாயகனைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தியுள்ளதற்காக! (கதாநாயகி விஷயத்தில் இவர்கள் கோட்டை விட்டு விட்டார்கள் என்பது வேறு விஷயம்!)
ரஜினிகாந்த், விஜய்காந்த் மாதிரி ஆண்மையோடு காதலிக்கவும், வீரத் தோடு சண்டை போடவும் வருங்காலத்துக்கு ஒரு வாரிசு இல்லையே என்று வருத்தப்படுபவர்களுக்கு ‘பூவிலங்கு’ முரளி நல்ல ஆறுதல்!
கல்லூரியில் புதுசாகச் சேரும் மாணவி சரசுவை (குயிலி) ‘டீஸ்’ செய்யும் போதும், தன்னை ‘ஸ்நப்’ செய்துவிடும் அந்த மாணவியைத் தேர்வு ஹாலில் பழிவாங்கும் போதும் முரளியின் டீன் ஏஜ் குறும்புத்தனம் ரசிக்கும்படியாகவே இருக்கிறது.
அந்த மாணவிக்காக வக்காலத்து வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்த ஆசிரியையை,தனது தந்தை மானபங்கப் படுத்திவிட்டதை அறிந்ததும் வாலிப மிடுக்கு மங்கிப் போய், தந்தை மீது வெறுப்பை உமிழ்ந்து ஒருவித வீராப்போடு வீட்டை விட்டு வெளியேறும் காட்சியில் முரளியின் பக்குவப்பட்ட நடிப்பு பாராட்டும்படியாகவே இருக்கிறது.
தற்கொலை முயற்சியிலிருந்து அந்த மாணவியைக் காப்பாற்றி, தன் தவற்றை உணர்ந்து அவளுடைய மன்னிப்புக்காக முரளி ஏங்குவது பரிதாபப்படும்படியாகவே இருக்கிறது.
ஆரம்பக் கட்டங்களில், தன் தயவில் வாழும் சக மாணவன் தன்னையே எதிர்ப்பதைப் பொறுக்கமாட்டாமல் அவனைப் புரட்டி எடுக்கும்போது, சரசுவுடன் காதல் கைகூடிய பிறகு அவளுடைய முறை மாமன் ராதாரவியோடு மோதும் போது, பின்னால் தந்தையால் ஏவி விடப் பட்டவர்களைக் கிடங்கில் அடித்து வீழ்த்தும்போது.. படத்தில் அவசியத்துக்கு அதிகமாகவே சண்டைக் காட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தாலும் ஒவ்வோர் அடிதடியிலும் முரளி தூள் கிளப்புவதால் அவை பொறுத்துக் கொள்ளும்படியாகவே இருக்கின்றன! (போதுமா போதுமா ‘முரளி புராணம்’ போதுமா?!)
தனது மகனை வீட்டுக்கு வரவழைக்க சரசுவைக் கோயிலில் சந்தித்துக் குழையுமிடத்தில், சரசுவின் வீட்டுக்குப் போய்ப் பணம் கொடுத்து, சம்பந்தத்தை முறியடிக்குமிடத்தில்… எம்.எல்.ஏ., செந்தாமரை ஆடும் ‘டபுல் கேம்’ நிஜ அரசியல்வாதியையே தோற்கடித்து விடும் !
சரசுவின் கொடுமைக்கார சித்தி ஒய். விஜயாவின் பாத்திரம் ஏகமாய் விரிவுபடுத்தப்பட்டிருப்பதன் ஒரே பலன் படத்தின் விறுவிறுப்பை அது குறைத்திருப்பதுதான் !
ஒரு தாழ்மையான வேண்டுகோள்: கல்லூரி காம்பவுண்டில் கதையை ஆரம்பிப்பது நிறுத்தப்பட வேண்டும்.
அதே போல் , கல்லூரி என்றால் ஒரு ‘ஹெட்’ மாணவன் இருப்பான். அடியாட்கள் மாதிரி அவனைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும், அங்கு மாணவனும் மாணவியும் முதலில் குடிமிப்புடிச் சண்டை போட்டுக் கொள்வார்கள் என்றெல்லாம் காட்டுவது நமது டைரக்டர்களுக்கு ஒரு சடங்காகி விட்டது! அதுவே ரசிகர்களுக்குச் சங்கடமாகவும் ஆகிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்!
செந்தாமரை தன் வீட்டில் ‘தமிழர்நிதி’ க்காக உண்டி வைத்து அதில் விழும் தொகையைத் தன் சொந்த நிதிக்குக் கபனீகரம் செய்து கொள்வதும், ‘லாக் – அப்’ பில் தள்ளப்பட்டவன் எம். எல். ஏ-வின் மகன் என்பதை அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர், கற்பனையில் ஒரு நிமிடம் தன்னியில்லாக் காட்டில் வாசம் செய்வதும் மாதிரியான ஒரு சில இடங்களிலேயே ‘குரு பக்தி’ யை வெளிப்படுத்தியிருக்கிறார் அமீர்ஜான்! மற்றபடி அவர் தனது அரங்கேற்றத்தில் அதிகமாகத் தப்புத் தானம், போடாமல் சொந்தக் காலிலேயே நின்று தொடர்கதை எழுத முயற்சித்திருப்பது வரவேற்கப்பட வேண்டியதே!
– விகடன் விமரிசனக் குழு