“தடக் புடக்’ என்று தறிநெய்யும் ஓசையும், ‘சளக் புளக்’ என்று களிமண் மிதிக்கும் சத்தமும் தமிழுக்குப் புதுசு! ஆனால், நெசவாளரின் வாழ்க்கைப் பிரச்னைகளோ, பானை செய்பவரின் பராக்கிரமங்களோ படத்தில் நூல் அளவுகூட வெளிப்படவில்லை. காரணம், கதையின் மையம் வேறு!
வாய் பேச முடியாத தங்கை ராஜேஸ்வரிக்கு கல்யாணம் முடித்துவைத்த பிறகுதான் தன் கல்யாணம் என்ற உறுதியான முடிவிலிருக்கும் அண்ணன் முரளி…. முரளிக்குப் பிரியப்பட்ட மீனா… முரளி மீது பிரியப்படும் சங்கவி… ஊனம் காரணமாக இரண்டு முறை கல்யாணம் நின்றுபோய் விட, தன்னால் தன் அண்ணன் காதல் தடைப்படுகிறது என்கிற குற்ற உணர்வில் தன் உயிரை மாய்த்துக்கொள்கிறாள் தங்கை!
அதன் பிறகும் அழகான காதலியை விட்டு, தங்கை போலவே உடல் ஊனமுற்ற ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்கிறார் முரளி! வணக்கம்!
முரளி பானை செய்யும் போது அவருடைய கற்பனையில் உருவாவது மீனா! நிஜத்தில் உருவாவதோ ஒரு நெளிந்த பானை… இது சேரனுக்குள் ஒரு கவிஞன் இருப்பதற்கு சரியான உதாரணம்! அழகில் அசத்துபவர் மீனா, அடக்கிவாசித்து கைதட்டல் பெறுபவர் முரளியென்றால், நடிப்பில் ஆச்சரியப்பட வைப்பவர் சங்கவி!’சங்கவிக்கு நடிப்பு வரும்’ என்பதைக் கண்டுபிடித்த டைரக்டர் சேரனுக்குப் பாராட்டு!
ஆரம்பத்தில் அவ்வப்போது தலையைக் காட்டும் வடிவேலு, கடைசியில் ‘ராசா மாதிரி மாப்பிள்ளை வேணும்னு தேடினியே தவிர, என்னை மாதிரி கறுப்பா இருக்கிறவனுக்கு உன் தங்கையைக் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு தோணுச்சா?’ என்று டச்சிங் வசனம் பேசி நெகிழ்த்துகிறார்.
எல்லாம் சரிதான். ஆனால் அங்கங்கே… குறிப்பாக, முரளி தன் தங்கைக்குத் திருமணம் செய்ய எடுத்துக்கொள்ளும் முயற்சிகளின் போதெல்லாம் வடிவேலுவும் கூடவே இருப்பதாகக் காட்டி இருந்தால், டைரக்டர் எதிர்பார்த்த ‘சென்டிமெண்டல் டச்’ மேலும் உறுதியுடன் எடுபட்டிருக்கும். முரளியின் தங்கையாக வாய் பேச முடியாத காரெக்டரில் வந்து படத்தைத் தாங்கிப் பிடிக்கிறார் ராஜேஸ்வரி. ‘இந்த நடிகை நிஜ வாழ்க்கையிலும் வாய் பேச இயலாதவர் தான்’ என்று டுபாக்கூர் விட்டாலும் நம்பிவிட முடியும் அளவு அற்புதமான முகபாவங்கள்!
“அண்ணே… நீ மரகதத்தை விரும்பற விஷயத்தை என்கிட்டே சொல்லாம மறைச்சிட்டே, பாத்தியா” என்கிற வசனத்தை வாய் பேசாவிட்டால் என்ன. ராஜேஸ்வரியின் கண்கள், புருவம், மூக்கு. உதடுகள் பேசிவிடுகிறதே! செவ்வாய்க்கிரகத்தில் வசிப்பவர்களைப் பற்றிய படமாக இருந்தாலும், கோயம்புத்தூர் பாஷையையும் கொஞ்சம் இங்கிலீஷையும் கலந்துபேசும் பிடிவாதத்தைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள் மணிவண்ணன் சாரோய்!
சங்கவி – முரளியின் ஒன் வே லவ், ராஜேஸ்வரியின் திருமண எதிர்பார்ப்பு, வடிவேலுவின் கல்யாண ஆசை என்று எல்லாமே தோல்வியில் முடியும் ‘நெகடிவ் ஆப்ரோச்’ தேவையா?
திருஷ்டிப் பொட்டு வைத்த மாதிரி இடைவேளைக்கு முன்பு “உங்க வாயை வெச்சுக்கிட்டு எப்பவாவது நல்ல விஷயம் பேசியிருக்கீங்களா?” என்று ஆரம்பிக்கும் முரளி, உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு ‘பார்ட்’டாகப் பெயர் சொல்லி “அதை வெச்சு நல்ல காரியம் செஞ்சிருக்கீங்களா…” என்று நீண்ட நெடிய வசனம் பேசும்போது… ஹா…வ்!
அதேபோல், ‘பொற்காலம்’ என்ற தலைப்பை Justify பண்ண வேண்டும் என்பதற்காக மீனா பேசும் அந்தக் கடைசிக் கட்ட வசனமும் சைல்டிஷ்! தவிர, க்ளைமாக்ஸுக்குத் தயாராகிற நேரத்தில் மிகக் கடுமையான பிரசார நெடியுடன் வடிவேலு பாட்டு!
யாருக்கு வேணும்!
படம் தியேட்டருக்கு வந்து விட்டாலென்ன… சேரனின் கத்திரிக்கோல் இரண்டு ரீல் வெட்டித் தள்ளினால் நல்லது – அவருக்கும்… படம் பார்க்கிற நமக்கும்!
– விகடன் விமரிசனக்குழு