பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை நேற்று முன்தினம் மத்திய அரசு அதிரடியாக குறைத்தது. இதேபோன்று எரிப்பொருட்களின் மீதான வாட் வரியையும் மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.
இதற்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளதுடன் மாநில அரசுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல். டீசல் மீதான வரி வருவாயில் 49 பைசா இழப்பு ஏற்படுவதாக குற்றம்சாட்டி வருகின்றன. எனவே எரிபொருள்கள் மீதான செஸ் வரியை தான் மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று பல்வேறு மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்
மாயாவதி
மத்திய அரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘- நீண்ட காலத்துக்கு பிறகு, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. பணவீக்கம், வறுமை, வேலையின்மை போன்றவற்றால் துயர வாழ்க்கைக்கு தள்ளப்பட்ட மக்களுக்கு இது கொஞ்சம் நிவாரணம் அளித்துள்ளது.
விலை இன்னும் குறைய, மத்திய அரசின் அறிவுரையின்படி உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் பெட்ரோல், டீசல் மீதான ‘வாட்’ வரியை குறைக்க வேண்டும்’ என்று மாயாவதி அறிவுறுத்தியுள்ளார்.