சென்னை: மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்கு சேர வேண்டிய ரூ.28 ஆயிரம் கோடியை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பெற்றுத்தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலாகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலாகிருஷ்ணன் கூறியது: ” மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து, மிகப்பெரிய கண்டன இயக்கத்தை நடத்துவது என தீர்மானத்திருக்கிறோம். இதனை சிபிஎம்(ஐ), சிபிஐ, விசிக, மார்க்சிஸ் கம்யூ. (லெனின்ஸ்ட்) ஆகிய 4 கட்சிகளின் சார்பில், வரும் 25-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை இந்த கண்டன இயக்கத்தை நடத்துவது என்று தீர்மானித்திருக்கிறோம். இதற்கு ஒட்டுமொத்த தமிழக மக்களும் ஆதரவளிக்க வேண்டும்.
பிரதமர் மோடி அரசு கடைபிடிக்கும் இந்த தவறான பொருளாதார கொள்கை மோசமான விளைவுகளை உண்டாக்கி வருகிறது. இதனால் நாடு தழுவிய அளவில் ஒரு கொந்தளிப்பு ஏற்படும் என்ற காரணத்தால், அண்மையில் பெட்ரோல்,டீசலுக்கான விலையை ஒரு சிறு அளவுக்கான வரியை குறைப்பது என்று மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. எனவே பெட்ரோல் டீசல் மீதான செஸ் வரியை மத்திய அரசு நீக்க வேண்டும். அண்டை நாடான இலங்கையில் ஒரு கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டிருப்பது, மத்திய ஆட்சியாளர்களுக்கு ஒரு அச்சத்தைக் கொடுத்திருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு குறைக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், மாநிலத்திற்கு வரவேண்டிய வருமானத்தை எல்லாம் மத்திய அரசு எடுத்துக்கொண்டு, பணத்தை கொடுப்பதில்லை. சட்டப்பேரவையில் கூட, மாநில அரசுக்கு கொடுக்க வேண்டிய ரூ.28 ஆயிரம் கோடியை மத்திய அரசு கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது. எனவே பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை நான் என்ன கேட்டுக் கொள்கிறேன் என்றால், தமிழகத்துக்கு சேர வேண்டிய ரூ.28 ஆயிரம் கோடியை மத்திய அரசை கொடுக்கச் சொல்லுங்கள். நிச்சயமாக அடுத்தநாளே திமுக தேர்தல் வாக்குறுதிபடி வரியை குறைக்க கூறுகிறோம் என்று அவர் கூறினார்.