மேற்கு வங்க மாநிலத்தில், ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில், எதிர்க்கட்சியான பாஜக எம்எல்ஏ அர்ஜூன் சிங் இணைந்தார்.
மேற்கு வங்க மாநிலத்தில், முதலமைச்சர்
மம்தா பானர்ஜி
தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், முக்கிய எதிர்க்கட்சியாக, பாஜக உள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், மம்தா பானர்ஜியை தோற்கடிக்க எவ்வளவு முயற்சி செய்தும், பாஜகவால் அவரை ஒன்றுமே செய்ய முடியவில்லை. சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்கு பிறகு, பாஜகவில் இருந்து, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு, அக்கட்சி நிர்வாகிகள் வண்டியை திருப்பி வருகின்றனர்.
இந்நிலையில், பாஜகவில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார் அர்ஜூன் சிங். இவர் ஏற்கனவே திரிணாமுல் காங்கிரஸில் இருந்தவர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்த அர்ஜூன் சிங், கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தனக்கு பாரக்பூர் தொகுதியில் சீட் கொடுக்காததால், அக்கட்சியில் இருந்து அதிரடியாக விலகினார். பின்னர் பாஜகவில் இணைந்து சீட் பெற்று திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் தினேஷ் திரிவேதியைத் தோற்கடித்தார். பாஜகவில் மாநில துணைத் தலைவர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது.
கட்சி மீதான அதிருப்தியால் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கே திரும்பி உள்ளார் அர்ஜூன் சிங். திரிணாமுல் காங்கிரஸ் தேசிய செயலாளரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜியை அவரது அலுவலகத்தில் இன்று சந்தித்துப் பேசி அக்கட்சியில் அர்ஜூன் சிங் இணைந்தார். மேற்கு வங்கத்தில் பாஜகவில் இருந்து விலகிய இரண்டாவது எம்பி அர்ஜூன் சிங். சமீபத்தில் பாபுல் சுப்ரியோ பாஜகவில் இருந்து விலகி திரிணாமுல் கட்சியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.