மொழிப் பிரச்னையை முதலில் கிளப்பியது யார்?! – பிரதமரின் ஆதங்கமும் அரசியலும்

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி காணொலி வாயிலாகக் கலந்துகொண்டு பேசும் போது, `கடந்த சில நாள்களாகவே மொழி அடிப்படையில் சர்ச்சையைக் கிளப்ப முயற்சி நடைபெற்றுவருகிறது. பா.ஜ.க ஒவ்வொரு மாநில மொழியிலும் இந்திய கலாசாரத்தின் பிரதிபலிப்பைக் காண்கிறது. தேசிய கல்விக் கொள்கையில் ஒவ்வொரு மாநில மொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மோடி – அமித்ஷா

கடந்த ஏப்ரல் மாதம் டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37ஆவது கூட்டத்திற்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை வகித்துப் பேசும்போது, “உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல. ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும். பிற உள்ளூர் மொழிகளின் வார்த்தைகளை ஏற்று இந்தி மொழியை நெகிழ்வாக மாற்றாத வரையில், அது பரப்பப்படாது. மத்திய அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் 22,000-க்கும் மேற்பட்ட இந்தி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்” என்று கூறினார்.

A.R.Rahman

அமித் ஷா இந்தி மொழி குறித்து தெரிவித்த இந்தக் கருத்துக்கு பல தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இதற்கு பதிலளிக்கும் விதமாக “தமிழ்தான் இணைப்பு மொழி” என கூறினார். அதோடு தனது சமூக வலைத்தள  பக்கங்களில், தமிழ்தாய் தமிழின் அடையாளமான `ழ’கரத்துடன் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை, இன்பத் தமிழ் எங்கள் உரிமைச் செம் பயிருக்கு வேர் என்ற பாரதிதாசனின் பாடலை குறிப்பிட்டு தமிழணங்கு என பதிவிட்டிருந்தார்.

தமிழணங்கு

ஓவியர் சந்தோஷ் நாராயணன் வரைந்த இந்த ஓவியம் இந்திய அளவில் மிகப்பெரிய விவாதமாக மாறியது.

“மொழி குறித்தான விழிப்புணர்வு முன்பு இருந்ததை விட இப்போது அதிகமாக இருக்கிறது” என்கிறார் வழக்கறிஞரும், திமுக செய்தி தொடர்பாளருமான மனுராஜ் சண்முகசுந்தரம்.

“மொழி பிரச்னை இன்றோ நேற்றோ ஆரம்பித்த சர்ச்சையோ, சண்டையோ, போராட்டமோ இல்லை. குறிப்பாக இந்தி திணிப்பு எதிர்ப்பு என்பது 1937-களில் இருந்தே தமிழகத்தில் மெட்ராஸ் மாகாணத்தில் அதிகமாக இருந்தது. பிரதமர் மோடியின் கருத்து எதன் அடிப்படையில் சொன்னார் என்பது தெரியவில்லை.  ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணவு என்று பா.ஜ.க முன் வைக்கிறது. அந்த ஒரு மொழி இந்தி தான் என்பதை எல்லோரும் உணர்கிறார்கள் என்பதன் பிரதிபலிப்பாக கூட இருக்கலாம். அந்த ஒரு மொழி ஒவ்வொருவரின் தாய் மொழி என்றால் இங்கு பிரச்னை இல்லை. 1950 ஆண்டு, நம் அரசியல் அமைப்பு சட்டத்தை ஏற்று கொண்ட போது, எட்டாவது அட்டவனையில் எட்டாவது செட்டியூலில் குறைந்த அளவில் தான் மொழிகள் இருந்தது. ஆனால் இன்றைக்கு 22 மொழிகள் உள்ளன. 1950லிருந்து 2022 வரை அலுவல் மொழிகளாக அதிகப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறோம். குறைக்கவில்லை.

வழக்கறிஞர் மனுராஜ் சண்முகசுந்தரம்

மொழி குறித்தான விழிப்புணர்வு கடந்த எழுபது ஆண்டுகளில் அதிகரித்துதான் இருக்கிறது. மொழி அழிந்தால் நம் கலாசாரம், பண்பாடு இருக்காது. அந்த உரிமையை பேசுவதற்கே பேச்சு இருக்காது என்பதை மக்கள் உணர்கிறார்கள். அரசியல் கட்சிகளும் அதை எடுத்து கொண்டு முன் வைப்பதில் எந்த தவறும் இலை. ஏனெனில் அதற்கான இடத்தை சட்டம் நமக்கு கொடுத்திருக்கிறது. அரசியலமைப்பு சட்டம் 14-ன் படி மொழி, மதம், பாலினம் அடிப்படையில் ஒடுக்க கூடாது. எல்லாமே சமம் என சொல்லப்படுகிறது. ஒவ்வொரு முறையும் அதை மீறும் போது சுட்டிக் காட்டுகிறோம். நேரு ‘இந்தி இருக்கும் போது ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருந்து கொண்டு தான் இருக்கும்’ என்கிற உத்திரவாதம் கொடுக்கிறார். எங்கெல்லாம் இந்தி அந்த மாநிலத்தின் மொழி இல்லையோ அங்கெல்லாம் ஆங்கிலத்தை சமமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என சட்டம் சொல்கிறது. உலக பொது மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. ஆனால், ஒவ்வொரு உள்துறை அமைச்சரும் ஏதாவது ஒரு வழியில் குழப்பி கொண்டே இருக்கிறார்கள். அதை தான் எதிர்கிறோம்” என்கிறார் மனுராஜ் சண்முகசுந்தரம்.

“திமுக, திக மொழி பற்றை உண்டாக்குவதை விட மொழி வெறியை உண்டாக்கி அதன் மூலமாக அரசியல் செய்து வருகிறார்கள்.” என்கிறார் ‘பெரியாரின் மறுபக்கம்’, ‘இந்துத்துவ அம்பேத்கர்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியரும், பா.ஜ.க பிரமுகருமான மா.வெங்கடேஷன்.

“மொழிக்கு அடிப்படையில் இனம் வைக்கிறார்கள். அந்த இனம் திராவிட இனம் என்று சொன்னால் கூட, அதை சுருக்கி தமிழ் என்று தான் கொண்டு வருகிறார்கள். மொழி வைத்து அரசு கட்டமைத்தவர்கள், அந்த மொழிக்கு பாதுகாப்பு கொடுத்திருக்கிறார்களா? இல்லை வளர்த்திருக்கிறார்களா? என்று பார்த்தால் அப்படி இல்லை. உதாரணத்திற்கு அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களை கணக்கில் எடுத்து அவர்களிடம் தமிழ் எழுத சொன்னால் சரியாக எழுத, படிக்க வரவில்லை. அறிவியல், பொறியியல் பாடங்கள் தமிழ் மொழிப்பெயர்ப்பே இல்லை. கிட்டத்தட்ட 1967-ல் இருந்து இருக்கிறவர்கள் இதை எப்போதே கொண்டு வந்திருக்க வேண்டுமல்லவா? இங்கு சட்டம் போட்டு தான் வணிக வளாகங்களுக்கே தமிழ் பெயர் வைக்க வேண்டிய சூழல் இருக்கிறது.

எழுத்தாளர் மா.வெங்கடேசன்

சுதந்திரத்திற்கு பின் மொழி அடிப்படையில் தான் மாநிலங்கள் உருவாக்க வேண்டும் என்று கிளர்ச்சி செய்து உண்டாக்கினார்கள். அது கொஞ்சம் கொஞ்சம் மறைந்து நாட்டின் முன்னேற்றம் நோக்கி போகும் போது மறுபடியும் மொழியை வைத்து அரசியல் செய்கிறார்கள். பா.ஜ.க என்றும் தாய் மொழிக்கு எதிரி அல்ல. ஒரு மொழி தான் உயிர். மொழி அழிந்தால் அந்த இனம் அழிந்து விடும். அந்த தெளிவில் தான் ஐந்தாவது வரை தாய் மொழியில் படிக்க வேண்டும் என்கிறோம். அரசியல் அமைப்பு சட்டத்திலேயே இந்தியை கொண்டு வர வேண்டும் என்பது இருப்பதால் தான் இந்தியை பற்றி பேசுகிறோம். அதனால் தான் நிதி ஒதுக்கி மத்தியில் ஆளும் அரசுகள் இந்திக்காக நிறைய செய்கிறார்கள்.

புரட்சியாளர் அம்பேத்கர் பற்றி எல்லோரும் பேசுகிறோம். அவர் இந்தி மொழி பற்றி சொல்லும் போது,  ‘ஒரு தேசம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று சொன்னால் இந்தி நிச்சயமாக வேண்டும். இந்தியை விட்டுவிட்டால் இந்த தேசம் சிதறுண்டு போகும்’ என்கிறார். மற்ற கட்சிகள் இதை ஏற்று கொள்வார்களா?

தமிழ் நாட்டில் தமிழ் மொழியை வளர்த்திருந்தால் பிரச்னையே இல்லையே! தனியார் பள்ளிகளில் எங்கு தமிழ் இருக்கிறது.  இந்தி தமிழ் அழிக்கிறதா? ஆங்கிலம் தமிழ் அழிக்கிறதா? என்கிற வாதம் வைத்தால் ஆங்கிலம் தான் தமிழை அழிக்கிறது என்பேன். காரணம் தமிழ் இந்தி வார்த்தைகள் நெருங்கி இருக்கிறது. என் வேலை சம்பந்தமாக 24 மாநிலத்திற்கு போனேன். இதில் அடிமட்ட தூய்மை பணியாளர்கள் வைத்து ஒரு மாநிலத்தில் நான்கு மாவட்டதிலாவது கூட்டம் நடத்துவேன். அப்படி பார்க்கும் போது ஒரு ஆளுக்கு கூட ஆங்கிலம் தெரியவில்லை. எல்லாமே இந்திதான். இந்தியா முழுவதும் சுத்த வேண்டும் என்றால் இந்தி அவசியம். ஆங்கிலம் தேவையே இல்லை. சிலர் ஆங்கிலம் உலக பொது மொழி என்கிறார்கள். ஜெர்மனி, சீனா போன்ற நாடுகளில் ஆங்கிலம் தெரியாமல் தான் இருக்கிறார்கள். குறிப்பிட்ட நாடுகளுக்கு போகும் போது தான் ஆங்கிலம் தேவைப்படுகிறது. இங்கு மொழி வளர்ப்பதற்கு பதிலாக மொழி வைத்து அரசியல் செய்வதைத் தான் பிரதமர் மோடி மோடி சுட்டிகாட்டுகிறார்” என்கிறார் மா.வெங்கடேசன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.