மோடி அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்து கண் துடைப்பு நாடகம்! கே.எஸ்.அழகிரி

சென்னை: மோடி அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்து கண் துடைப்பு நாடகம் என்றும், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு கலால் வரியை ஏற்றியது ரூ.26.77 குறைத்தது ரூ.14.50 மட்டுமே என மத்தியஅரசு மீது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளர்.

இதுகுறித்து  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய பாஜ அரசு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தபோது கூட பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் கலால் வரி விதித்து, கடந்த 8 ஆண்டுகளில் ரூ.27 லட்சம் கோடி வருவாயை பெருக்கி கொண்டது. இதனால், சமீப காலமாக பணவீக்கம் 95 மாத உயர்வாக கடந்த ஏப்ரல் மாதத்தில் 7.79 சதவீதமாக உயர்ந்து விட்டது. உணவு பணவீக்கம் 8.38 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால், அனைத்து பொருட்களின் விலை ஏறுவதை எதிர்கொள்ள முடியாமல் பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய பாஜ அரசு பெயரளவில் குறைத்திருக்கிறது. ஆனால், உண்மை நிலையை ஆய்வு செய்யும் போது இந்த விலை குறைப்பினால் சில்லரை பணவீக்க அளவில் 0.15 சதவீத புள்ளிகள் அளவில்தான் பயன் தரும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள். எனவே, மோடி அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்து கண் துடைப்பு நாடகத்தை நடத்தியிருக்கிறது.

ஒன்றிய பாஜ அரசு 12 தவணைகளில் கலால் வரியை ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.26.77 உயர்த்தியது. ஆனால் குறைத்தது ரூ.14.50 மட்டுமே. இந்நிலையில், மாநில அரசுகள் வாட் வரியை குறைத்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டுமென்று ஒன்றிய நிதியமைச்சர் கூறியிருப்பது பொறுப்பை தட்டி கழிக்கிற செயலாகும்.

பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டுமென்று சொன்னால் பெட்ரோல், டீசல் விலையை கடுமையாக குறைப்பதன் மூலமே அது சாத்தியமாகும். இதை நிதியமைச்சர் புரிந்து கொள்ளாமல் மாநில அரசுகள் மீது பழி போடுவது ஏற்று கொள்ள முடியாது. பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரை வரலாறு காணாத விலை உயர்வுக்கு ஒன்றிய பாஜ அரசின் தவறாக கொள்கை தான் காரணம். ஒன்றிய பாஜ அரசின் இத்தகைய விரோத நடவடிக்கைகளுக்கு மக்கள் உரிய பாடத்தை விரைவில் புகட்டுவார்கள்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.