புதுடெல்லி: மத்திய பிரதேசத்தின் தலைநகரான போபாலில் உள்ள ஜாமியா மசூதியும், சிவன் கோயிலை இடித்துக்கட்டப்பட்டதாக புகார் எழுப்பும் இந்து அமைப்புகள், நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் திட்ட மிட்டுள்ளன.
உத்தர பிரதேசத்தின் அயோத்தி யில் கடந்த 2019-ல் ராமர் கோயில் பிரச்சினை முடிவுக்கு வந்தது. இதன் மேல்முறையீட்டு மனுவில் இந்துதரப்பினருக்கு கோயில் கட்ட அனுமதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பின்போது, மத்திய அரசின் வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்பு சட்டம் 1991-ன்படி, இதரவரலாற்றுக்காலப் புனிதத் தலங்கள் உள்ளநிலையிலேயே எந்த மாற்றம் இன்றி தொடரும் எனவும் உறுதி அளிக்கப்பட்டது.
ஆனால், வாரணாசி காசிவிஸ்வநாதர் கோயில் அருகில்உள்ள கியான்வாபி மசூதி, கோயிலை இடித்துக் கட்டப்பட்டுள்ளது என்று சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக நீதிமன்ற உத்தரவின்படி கள ஆய்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மதுராவின் ஷாயி ஈத்கா உள்ளிட்டப் பல மசூதிகள் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டு வரு கின்றன.
இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தின் போபாலிலுள்ள, ஜாமியா மசூதிக்கு சிக்கல் உருவாகி விட்டது. இது கடந்த 19-ம் நூற்றாண்டில் போபாலின் முதல் பெண் நவாபான குத்துஸியா பேகம் என்பவரால், 1832முதல் 1857-ம் ஆண்டிற்கு இடையேகட்டப்பட்டது. அப்போது, அங்கிருந்த சிவன் கோயிலை இடித்து கட்டியதாகப் புகார் உள்ளது.
இதன் மீதான வரலாற்று ஆவணங்களுடன், ம.பி மாநில உள்துறை அமைச்சரான நரோத்தம் மிஸ்ராவிடம் மனு அளிக் கப்பட்டுள்ளது. இதை இந்து அமைப்பான சன்ஸ்கிரித் பச்சாவ் மன்சின் சார்பில் அதன் தலைவர் சந்திரசேகர் திவாரி அளித்தார். இதில், போபாலின் மசூதியில் களஆய்வு நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த புகாருக்கு போபால் முஸ்லிம்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.