சென்னை
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் ஜூன் 7 முதல் 9 வரை வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர்.
இந்திய அரசு கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. ஆகவே அரசுக்குக் கூடுதலான செலவினம் ஏற்பட்டது. அதனால் அரசுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியைச் சமாளிக்க அரசு ஊழியர்களுக்குக் கடந்த 2020ம் ஆண்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
தொற்று பரவல் குறைந்ததைத் தொடர்ந்து கடந்த 2021ம் ஆண்டு மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 11% அகவிலைப்படி உயர்வு வழங்கியது. இதனைத் தொடர்ந்து மீண்டும் ஜூலையிலும் 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் 1 ஆம் தேதி தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டது. ஆயினும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு உயர்வு அளிக்கப்படவில்லை.
இதையொட்டி தங்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அளிக்க வேண்டுமென ரேஷன் கடை ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை. எனவே வரும் ஜூன் மாதம் 7 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக ரேஷன்கடை ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.