லைவ் அப்டேட்ஸ்: போர்க்குற்ற வழக்கில் ரஷிய வீரருக்கு ஆயுள் தண்டனை விதித்தது உக்ரைன் கோர்ட்

23.5.2022

20:30: உக்ரைனில் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, இத்தாலி பரிந்துரை செய்துள்ள அமைதித் திட்டத்தை பரிசீலித்து வருவதாக ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்தார்.
20:00: ரஷிய வீரர் மீதான போர்க்குற்ற விசாரணை நிறைவடைந்த நிலையில், ஆயுதம் எதுவும் இல்லாமல் நிராயுதபாணியாக இருந்த குடிமகனை கொன்றதற்காக அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து உக்ரைன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
19:45: சுவிட்சர்லாந்தின் டாவோஸில் உள்ள உலகப் பொருளாதார மன்ற கூட்டத்தில் காணொலி வாயிலாக பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, உக்ரைனுக்கு நாங்கள் கேட்கும் அனைத்து ஆயுதங்களும் தேவை என வலியுறுத்தினார். ரஷியா மீது அதிகபட்ச பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
19:30: ரஷியப் படைகள் உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள தொழில்துறை மையப் பகுதியில் குண்டுகளை வீசி தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. 
17:00: உக்ரைனின் டெஸ்னா நகரில் ரஷியா நடத்திய தாக்குதலில் 87 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
15.03: உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா, அந்நாட்டின் கோதுமை விளையும் விவசாய நிலங்கள் அதிகம் உள்ள ஒடெசா நகரத்தை முற்றுகையிட்டுள்ளது. அறுவடை காலம் நெருங்கும் நிலையில், அந்நகரத்தை மீட்காவிட்டால், உக்ரைனில் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே அந்நகரத்தில் 400 டன் கால்நடை தீவணங்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கை ரஷியா அழித்தது குறிப்பிடத்தக்கது.
10.51: உக்ரைனுக்கு எதிரான போரை குறிக்கும் விதமாக ரஷ்ய படைகள், ‘Z’ மற்றும் ‘V’ என்ற 2 ரஷ்ய எழுத்துக்களை பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் இந்த எழுத்துக்களை உக்ரைனில் பயன்படுத்த அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தடை விதித்துள்ளார். கல்வி மற்றும் வரலாற்று நோக்கங்களுக்கு மட்டும் அந்த எழுத்துக்களை பயன்படுத்த ஜெலன்ஸ்கி அனுமதி வழங்கியுள்ளார்.
06.30: போலந்து அதிபர் ஆண்ட்ர்செஜ் துடா உக்ரைன் சென்றார். கீவ் நகரில் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து உரையாடினார். உக்ரைன் நாடாளுமன்றத்திலும் அவர் உரை ஆற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், தனது எதிர்காலத்தை தீர்மானிக்கும் உரிமை உக்ரைனுக்கு மட்டுமே உண்டு. ரஷிய அதிபருக்கு உக்ரைன் அடிபணிய வேண்டும் என்று கவலைக்குரல்கள் கூறுகின்றன. ஆனால் அந்தக் குரல்களுக்கு உக்ரைன் செவிசாய்க்கக் கூடாது. ஏனென்றால் உக்ரைனின் ஒரு அங்குல நிலத்தை விட்டுக்கொடுத்தாலும் அது ஒட்டுமொத்த மேற்கத்திய நாடுகளுக்கு விழுகிற அடியாக அமையும் என்றார்.
03.45: பிரெஞ்சு ஐரோப்பிய விவகாரத்துறை மந்திரி கிளெமென்ட் பியூன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், நாம் நேர்மையாக இருக்க வேண்டும். இன்னும் ஆறு மாதங்களில் அல்லது ஓரிரு ஆண்டுகளில் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரப் போகிறது என்று நீங்கள் சொன்னால், நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என்று அர்த்தம். உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வது என்பது இன்னும் 15 அல்லது 20 ஆண்டுகளில் நிகழலாம் என தெரிவித்தார்.
00.30: உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி அங்கு ஒரு டிவி சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், உக்ரைன் போரில் ரத்தக்களறி ஏற்படுகிறது. தாக்குதல் தொடர்கிறது. போர் தொடர்பாக உக்ரைன், ரஷியா இடையேயான பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் பேச்சுவார்த்தை மூலம்தான் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும்.
போர்க்களத்தில் உக்ரைன் வெற்றி பெற்றாலும், பேச்சுவார்த்தைக்குப் பின்னரே போர் செயல்பாடுகள் முடிவுக்கு வரும் என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.