விருதுநகர்: விருதுநகரில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் திமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் 806 பக்க குற்றப் பத்திரிகையும், சிறுவர்கள் 3 பேர் மீது விருதுநகரில் உள்ள இளைஞர் நீதிக்குழுமத்தில் சுமார் 806 பக்க குற்றப் பத்திரிகையும் சிபிசிஐடி போலீஸாரால் இன்று தாக்கல் செய்யப்பட்டன.
விருதுநகரில் 22 வயது இளம்பெண் ஒருவருக்கு தொடர்ந்து 8 மாதங்களாக பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக கடந்த மார்ச் மாதம் விருதுநகர் மேலத்தெருவைச் சேர்ந்த ஹரிஹரன் (27), அவரது நண்பரான திமுக பிரமுகர் ஜூனத் அகமது (27), ரோசல்பட்டியைச் சேர்ந்த பிரவீன் (26), பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அறிமுகமான மாடசாமி (37) ஆகியோரும், பள்ளி மாணவர்கள் 4 பேரும் கைதுசெய்யப்பட்டனர்.
விருதுநகர் பாண்டியன் நகர் போலீஸாரிடமிருந்து இந்த வழக்கு விசாரணை தமிழக முதல்வரின் உத்தரவுப்படி கடந்த மார்ச் 24-ம் தேதி மாலை சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 8 பேர் மீதும் சிபிசிஐடி போலீசார் 6 பிரிவுகளின் கீழ் புதிதாக வழக்குப்பதிவு செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேரையும் 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும், மதுரையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்ட 4 சிறுவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் 90 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சட்டசபையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதையடுத்து, குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியில் சிபிசிஐடி போலீஸார் தீவிரம் காட்டினர்.
இதையடுத்து, இவ்வழக்கில் தொடர்புடைய 15 வயதுடைய மற்றொரு சிறுவன் கடந்த 11-ம் தேதி விருதுநகரில் உள்ள 2-வது நீதித்துறை நடுவர் நிஷாந்தினி முன்பு பூட்டிய அறையில் ஆஜராகி சுமார் 1 மணி நேரம் 45 நிமிடங்கள் வாக்குமூலம் அளித்தார். அப்போது, தனக்கு இவ்வழக்கில் தொடர்பு இல்லை என்றும், தன்னை இணைத்து பொய்யாக வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், எனவே, தன்னை இவ்வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என வாக்குமூலம் அளித்ததார்.
இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இச்சிறுவன் வழக்கில் குற்றவாளி பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர்.
இந்நிலையி், இவ்வழக்கில், கைதுசெய்யப்பட்டுள்ள ஹரிஹரன், ஜூனத்அகமது, மாடசாமி, பிரவீன் ஆகியோர் மீது 806 பக்க குற்றப்பத்திரிகையை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நீதிபதி கோபிநாத் முன்னிலையில் சிபிசிஐடி டிஎஸ்பி வினோதினி தலைமையிலான சிபிசிஐடி போலீஸார் இன்று தாக்கல் செய்தனர்.
இதேபோன்று, இவ்வழக்கில் கைதுசெய்யப்பட்ட 4 சிறுவர்களில் 15 வயது சிறுவன் ஒருவர் இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதால் மற்ற 3 சிறுவர்கள் மீதும் 806 பக்கங்கள்கொண்ட குற்றப்பத்திரிகையை முன்னதாக விருதுநகர் சூலக்கரையில் உள்ள இளைஞர் நீதிக்குழுமத்தில் நீதித்துறை நடுவர் கவிதா முன்னிலையில் சிபிசிஐடி டிஎஸ்பி வினோதினி தலைமையிலான சிபிசிஐடி போலீஸார் இன்று தாக்கல் செய்தனர். இவ்வழக்கில் 2 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.