விருதுநகரில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவரை தொடர்ந்து 8 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த மார்ச் மாதம் விருதுநகர் மேலத்தெருவைச் சேர்ந்த ஹரிஹரன் (27), அவர் நண்பரான தி.மு.க இளைஞரணி முன்னாள் நிர்வாகி ஜூனைத் அகமது (27), ரோசல்பட்டியைச் சேர்ந்த பிரவீன் (26), பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அறிமுகமான மாடசாமி (37) ஆகியோரும், பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேரை விருதுநகர் ரூரல் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் 90 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும், முன்மாதிரி வழக்காக எடுத்து விசாரிக்கவும் வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி போலீஸூக்கு மாற்றி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன்படி கடந்த மார்ச் 24-ம் தேதி இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-யிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 8 பேர் மீதும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் 6 பிரிவுகளின் கீழ் புதிதாக வழக்கு பதிவுசெய்து விசாரணையை தொடங்கினர். சிறையில் அடைக்கப்பட்ட ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேரையும் 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தினர்.
மேலும், மதுரையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்ட 4 சிறுவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையே, மாணவர்களின் எதிர்கால நலன்கருதி வழக்கிலிருந்து 4 சிறுவர்களுக்கும் ஜாமீன் வழங்கி விருதுநகர் இளையோர் நீதிக்குழுமம் உத்தரவிட்டது. அதன்பேரில் ஜாமீனில் வெளியே வந்த சிறுவர்களின் ஒருவர், தனக்கு இந்த வழக்கில் தனக்கு தொடர்பு இல்லை என்றும், பொய்யாக தான் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் இளம்பெண்தான் தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவர் மீது வழக்கு பதிவுசெய்ய வேண்டும் என்றும் தமிழக முதல்வர், உள்துறை செயலர், மாவட்ட நீதிபதி, மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்கு மனு அனுப்பினார்.
இந்த மனு, வழக்கில் திருப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த வழக்கில் தொடர்புடைய 15 வயதுக்குட்பட்ட அந்தச் சிறுவன் கடந்த 11-ம் தேதி விருதுநகரில் உள்ள 2-வது நீதித்துறை நடுவர் நிஷாந்தினி முன்பு பூட்டிய அறையில் ஆஜராகி சுமார் 1 மணி நேரம் 45 நிமிடங்கள் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், தனக்கு இந்த வழக்கில் தொடர்பு இல்லை என்றும், தன்னை இணைத்து பொய்யாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என வாக்குமூலம் அளித்ததாகக் கூறப்படுகிறது.
பாலியல் வழக்கில் 90 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜூனைத் அகமது, மற்றும் வழக்கில் தொடர்புடைய 16 வயதுக்கு மேற்பட்ட பள்ளிமாணவர்கள் 3 பேர் என மொத்தம் 7 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டு, சுமார் 806 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை ஸ்ரீவில்லிப்புத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நடுவர் கோபிநாத்(பொறுப்பு) முன்பு சி.பி.சிஐ.டி. போலீஸ் தாக்கல் செய்தது.
இதேபோல், மாணவர்கள் 3 பேர் மீதான குற்றப்பத்திரிகை விருதுநகர் இளஞ்சிறார் நீதிமன்றத்தில் நீதிபதி கவிதா முன்பு தாக்கல் செய்யப்பட்டது. 15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவரை மட்டும் வழக்கிலிருந்து சி.பி.சி.ஐ.டி விடுவித்துள்ளது. ஆனால், விடுவிக்கப்பட்டுள்ள அந்தப் பள்ளி மாணவர் முக்கிய சாட்சியாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, வழக்கு தொடர்பான விசாரணைக்கு அந்த மாணவர் ஆஜராகி சாட்சியம் அளிப்பார் என தெரிகிறது.
வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஹரிஹரனுடன் செல்போனில் யார், யார் அடிக்கடி தொடர்பில் இருந்தது என்பதை அறிய பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேரையும் குரல்பதிவு பரிசோதனைக்காக சென்னை அழைத்துச்சென்று ஆய்வு செய்ய உள்ளதாக சி.பி.சி.ஐ.டி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.