வெங்கையா ஜனாதிபதி வேட்பாளர்; நீட் விலக்கு ஓ.கே… இதுதான் தி.மு.க ப்ளானா?

தமிழகத்தில் ஆளும் திமுகவை, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவைவிட ஒரு படி மேலே சென்று பாஜக தீவிரமாக விமர்சிக்கிறது. அதிமுகவின் தற்போதைய பெரிய பலவீனம் ஒரு கவர்ச்சிகரமான தலைவர் இல்லை என்பதுதான். அதானாலேயே, கடந்த ஓராண்டில் சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அதிமுகவால் திமுக அரசுக்கு எதிராக பெரிய போரட்டங்கள் எதையும் செய்ய முடியவில்லை.

அதே நேரத்தில், அண்ணாமலை தலைமையிலான தமிழக பாஜக, தமிழகத்தில் ஆளும் திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறது. திமுகவும் பதிலடி கொடுத்து வருகிறது. திமுக 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை காங்கிரஸ் கட்சி தலைமையில் எதிர்கொண்டு பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறது.

திமுக அதற்கான நகர்வுகளையும் மேற்கொண்டு வருகிறது. திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழாவுக்கு ராகுல் காந்தி, பினராயி விஜயன், தேஜஸ்வி யாதவ், ஒமர் அப்துல்லா ஆகியோர் பங்கேற்றனர். இது தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஓரணியில் ஒன்றிணைப்பதை நோக்கிய படிதான் என்பதில் சந்தேகமில்லை. அதே போல, திமுகவின் டெல்லி அலுவலகம் திறப்பு விழாவில், சோனியா காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மு.க. ஸ்டாலின் தனது டெல்லி பயணத்தின்போது, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார். திமுகவின் இந்த நகர்வுகள் எல்லாமே பாஜகவுக்கு எதிரான நகர்வுகள்தான்.

தொடர்ந்து, திமுக மத்திய அரசின் நீட், க்யூட், புதிய தேசிய கல்விக் கொள்கை என அனைத்துக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பாஜகவும் திமுக அரசின் ஓவ்வொரு நகர்வை கடுமையாக விமர்சித்து வருகிறது. அரசியல் களத்தில் திமுகவும் பாஜகவும் பரம எதிரிகளாக உள்ள நிலையில்தான், கருணாநிதியின் சிலை திறப்புக்கு திமுக, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை சிறப்பு விருந்தினராக அழைத்திருப்பது அரசியல் களத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 26ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தபடி சென்னை ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தின் வளாகத்தில் கலைஞர் கருணாநிதி சிலை நிறுவும் பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ1.7 கோடி மதிப்பீட்டில் சுமார் 16 அடியில் தயாராகும் கலைஞர் சிலை, 12 அடி பீடத்தில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெரியார் மற்றும் அண்ணா சிலைகளுக்கு இடையே கலைஞர் கருணாநிதி சிலை நிறுவப்படவுள்ளது. மே 28ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு கலைஞர் கருணாநிதி சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார்.

குடியரசு துணைத் தலைவர் பதவி அரசியல் கட்சி சார்பற்ற பதவி என்றாலும், தற்போது குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடு பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தவர். அவரை கருணாநிதியின் சிலைத் திறப்புக்கு அழைத்திருப்பதால், திமுகவின் மதச்சார்பற்ற கொள்கை எல்லாம் போலியானதா என்ற சந்தேகம் மதச் சார்பற்ற அரசியல் சக்திகள் மற்றும் கூட்டணி கட்சிகள் இடையே கேள்விகள் எழுந்துள்ளன.

இது குறித்து திமுக வட்டாரங்கள் கூறுகையில், “மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியாக ஒன்றிணைவது என்ற திமுகவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அதே நேரத்தில், தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இருக்கிறது. பல விஷயங்களில் ஒன்றிய அரசின் ஆதரவு தமிழக அரசுக்கு தேவையாக உள்ளது. மாநில அரசுகள் மத்திய அரசை சார்ந்திருக்க வேண்டும் என்ற நிலையை பாஜக கடந்த சில ஆண்டுகளில் ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு கொண்டுவரும் முக்கிய திட்டங்களுக்கு அனுமதி வழங்கவோ, நிதி வழங்கவோ ஒன்றிய அரசின் ஆதரவு அவசியமாகிறது.

இந்த சூழ்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் திமுகவின் ஆதரவை பாஜக எதிர்பார்க்கிறது. தற்போது குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடு குடியரசுத் தலைவர் பதவியை குறிவைத்துள்ளதாக கூறுகிறார்கள். வெங்கையா நாயுடு குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் திமுக ஆதரவளிக்கும்.

அதேபோல் அவர் அந்த பதவியை அடைந்தால் தமிழகத்தின் நீட் தேர்வு விலக்கு விவகாரம் உள்ளிட்ட சில விஷயங்களில் திமுக தமக்கு சாதகமான பலன்களை பெறமுடியும் என்பதே ஸ்டாலின் போடும் கணக்கு” என்கிறார்கள்.

உண்மையில், திமுக அரசு நீட் தேர்வு விலக்கு போன்ற விஷயங்களில் மத்திய பாஜக அரசின் ஆதரவு தேவை என்பதற்காகத்தான், கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை அழைத்து திமுக திட்டமிட்டுள்ளதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.