குவாஹாட்டி: அசாமில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியை விமானப் படை தீவிரப் படுத்தியுள்ளது.
கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அசாமில் கனமழை பெய்து வருகிறது. அந்த மாநிலத்தின் 35 மாவட்டங்களில் 32 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம், நிலச்சரிவு பாதிப்புகளால் நேற்று மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் மாநிலத்தின் மொத்த உயிரிழப்பு 18 ஆக உயர்ந்துள்ளது.
அசாம் முழுவதும் 499 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. வீடுகளை இழந்த 92,124 பேர் இந்தமுகாம்களில் தங்க வைக்கப்பட் டுள்ளனர். உணவு, குடிநீர் இன்றிபரிதவிக்கும் மக்களுக்காக 519 நிவாரண விநியோக மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் மூலமும், விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலமும் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்படு கின்றன.
பிரம்மபுத்திரா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெள்ளம், நிலச்சரிவால் சாலை போக்குவரத்து முடங்கி யுள்ளது. முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்கள் தனித்தீவுகளாக மாறியுள்ளன. இதை கருத்தில் கொண்டு அசாமின் குவாஹாட்டி மற்றும் சில்சார் இடையேஅவசர விமான சேவை தொடங் கப்பட்டிருக்கிறது. இதற்கான விமான கட்டணம் ரூ.3,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் அசாமில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியை விமானப் படை தீவிரப்படுத்தியுள்ளது. விமானப் படையின் ஏஎன் 32 ரகவிமானங்கள், எம்ஐ17 ரக ஹெலிகாப்டர்கள், சினூக் ஹெலிகாப்டர ்கள், ஏஎல்எச் துரூவ் ரக ஹெலி காப்டர்கள் மூலம் பொதுமக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.
மழை வெள்ளத்தில் தண்ட வாளங்கள் சேதமடைந்து சரக்கு, பயணிகள் ரயில் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு ரயில் நிலையங்களில் நூற்றுக்கணக்கான பயணிகள் சிக்கித் தவிக்கின்றனர். திடோக் சேரா ரயில் நிலையத்தில் தவித்த 119 பயணிகளை விமானப்படை நேற்று முன்தினம் பத்திரமாக மீட்டது. தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த வீரர்களும் இரவும் பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.