தென்னாப்பிரிக்காவில், ஹாட் ஏர் பலூன்கள் (Hot Air Balloon) போயர் போரின் போது எதிரி முகாம்களையும், எதிரிகளின் நடமாட்டத்தையும் உளவு பார்க்கும் நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டன. 1969 ஆம் ஆண்டு ‘முதல் ஹாட் ஏர் பலூன்’ தென்னாப்பிரிக்காவிற்கு வந்தது. 1972 இதற்கென ஒரு கிளப் தொடங்கப்பட்டது, நான்கு வருடங்கள் கழித்து 16 விமானிகள் சர்வதேச ராட்சத பலூன் பந்தயத்தில் கலந்து கொண்டு ஜோகன்னஸ்பர்க் முதல் டர்பன்வரை பயணித்தனர். இந்தப் பந்தயம் பொதுவாக சூரிய உதயத்திற்கு முன்பே தொடங்கி விடும். ராட்சத பலூனை இயக்கும் விமானி 10 முதல் 20 மீட்டர் உயரத்திற்கு பலூனை உயர்த்தி, காற்றோடு மெதுவாக மிதப்பார்.
சர்வதேச அளவில் சிறப்பாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் அமெரிக்கர்களே அதிகம் பங்கேற்று வந்த நிலையில், தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த பெண் முதல் முறையாக பங்கேற்க உள்ளார்.
27 வயதான மாத்புலா, சில வருடங்களுக்கு முன்பு வேலை தேடிக்கொண்டிருந்தபோது, ஏர் பலூன் டூர் கம்பெனியில் அவருக்கு மார்க்கெட்டிங் அசிஸ்டென்ட்டாக வேலை கிடைத்துள்ளது. அங்கு சென்று பலூன்களை பார்த்த உடனே ராட்சத பலூன்கள் மீது காதல் கொண்டுள்ளார். தென்னாப்பிரிக்காவின் பலூன் மற்றும் ஏர்ஷிப் ஃபெடரேஷன் (BAFSA) மற்றும் விளையாட்டு, பொழுதுபோக்குத் துறையின் மூலம் ராட்சத பலூனை இயக்கும் பயிற்சிபெற உதவித் தொகையைப் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு இதற்கான உரிமம் பெற்ற இவர், ஜூன் மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் ஹாட் ஏர் பலூன் சாம்பியன்ஷிப்பில் முதன் முறையாகப் போட்டியிட உள்ளார். இவரின் புதிய முயற்சிக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.