சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்ட தனது மகனின் உயிரைக் காப்பாற்ற, தாய் ஒருவர் தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் புலிவெந்துலா பகுதியைச் சேர்ந்தவர் ஷிவ கேசவா. இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறுநீரக செயலிழப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அவருடைய குடும்பத்தினர், சிகிச்சைக்காக சிட்டிசன்ஸ் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்து பார்த்ததில், ஷிவ கேசவாவின் உடல்நிலை மோசமடைந்து இருந்ததால், அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இதையடுத்து சிறுநீரக தானம் செய்வதால் எதிர்காலத்தில் எவ்வித உடல்நலக் கோளாறும் ஏற்படாது என்று மருத்துவர்கள் உறுதியளித்ததையடுத்து, ஷிவ கேசவாவின் 56 வயதான தாய், சிறுநீரக தானம் அளிக்க முன்வந்தார். இதனைத் தொடர்ந்து, நன்கொடையாளர் மற்றும் நோயாளி ஆகிய இருவரும் விரைவில் குணமடையும் வகையில், குறைந்தபட்ச ஊடுருவும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரோபோடிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால், அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்படும் வலி, தொற்று குறைந்த அளவிலேயே காணப்படும்.
இதுகுறித்து மருத்துவர் மல்லிகார்ஜுன் ரெட்டி கூறுகையில், ”அறிவியல் ஆதாரம் இல்லையென்றாலும், உடன்பிறந்தவர்களால் தானம் செய்யப்படும் உறுப்புகளை விட, நோயாளிக்கு, அவரது தாய் தானமாக அளிக்கும் உறுப்புகள் சிறப்பாக செயல்படுவதை நாங்கள் பார்த்திருக்கிறோம். இருவருக்குமிடையில் உணர்ச்சிரீதியான தொடர்பு இருப்பது ஒரு காரணமாக உள்ளதை பார்க்க முடிகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ரோபோ உதவியுடன் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை (Robot-Assisted Kidney Transplantation – RAKT), உயர்மட்ட மருத்துவ நிபுணத்துவம் கொண்ட அறுவை சிகிச்சை நிபுணர்கள் மேற்கொண்டதாக மருத்துவர் மல்லிகார்ஜுன் ரெட்டி கூறியுள்ளார். ரோபோடிக் அறுவை சிகிச்சையானது, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை, உகந்த அறுவை சிகிச்சை நிலையில் செய்ய அனுமதிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த செயல்முறை குறித்து மருத்துவர் மல்லிகார்ஜுன் ரெட்டி விரிவாகக் கூறியுள்ளார்.
அதில், “நன்கொடையாளருக்கு லேப்ராஸ்கோபிக் உதவியுடன் நெஃப்ரெக்டோமியை நாங்கள் செய்துள்ளோம். நோயாளிக்கு ரோபோ உதவியுடன் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளோம். குறைந்த ஊடுருவும் அறுவை சிகிச்சை மூலம், நோயாளிக்கு குடலிறக்கம் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு தான். இந்த அறுவை சிகிச்சைகள் மிகவும் துல்லியமானவை. ஒரே ஒரு இன்ச் கீறல் மட்டுமே செய்யப்படுவதால், வடுக்கள் பெரிதாக இருக்காது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மகனுக்குஇ தாய் சிறுநீரக தானம் அளித்து உயிரை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM