தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி சாதி அடிப்படையிலான வன்கொடுமைகள், பாகுபாடுகள் அதிகம் உள்ள கிராமங்களின் எண்ணிக்கையில், தமிழகத்தின் கலாச்சார தலைநகர் என்று அழைக்கப்படும் மதுரை முதல் இடத்திலும் விழுப்புரம் இரண்டாவது இடத்திலும் உள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
மதுரையைச் சேர்ந்த தி ஃபேக்ட் அமைப்பின் திட்ட இயக்குநர் எஸ் கார்த்திக் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம், மாவட்டம் தோறும் எத்தனை கிராமங்கள் சாதி வன்கொடுமைகள் நடக்கின்றன. மாவட்ட நிர்வாகம் நடத்திய தீண்டமை ஒழிப்பு விழிப்புணர்வுக் கூட்டங்கள் எத்தனை என்று கேட்ட கேள்விக்கு சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரல் (ஏடிஜிபி) பதில் அளித்துள்ளார்.
ஆர்.டி.ஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஏடிஜிபி அலுவலகத்தின் அறிக்கையில், சாதிக் வன்கொடுமைகளில் 43 கிராமங்களுடன் தமிழகத்தில் கலாச்சாரத் தலைநகர் என்று அழைக்கப்படும் மதுரை மாவட்ட முதல் இடத்திலும், விழுப்புரம் இரண்டாவது இடத்திலும் மற்றும் திருநெல்வேலி 3வது இடத்திலும் உள்ளன. சாதி வன்கொடுமைகளில், மதுரை மாவட்டத்தில் 43 கிராமங்களுடன் முதல் இடத்திலும் விழுப்புரம் 25 கிராமங்களுடன் 2வது இடத்திலும், திருநெல்வேலி மாவட்டத்தில் 24 கிராமங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. இதையடுத்து, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் இடம்பிடித்துள்ளன. ஒரே ஒரு கிராமத்துடன் சென்னை கடைசி இடத்தில் உள்ளது. மாநிலம் முழுவதும் சாதி வன்கொடுமை நடப்பதாக மொத்தம் 445 கிராமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகையில், “கொரோனா வைரஸ் தொற்றுநோய் நம் அனைவரின் இயல்பு வாழ்க்கையையும் கட்டுப்படுத்தியிருந்தாலும், விழுப்புரத்தில் சாதி வன்கொடுமைகள் அதிகமாக இருந்துள்ளது. சாதி வன்கொடுமை நடைபெறும் கிராங்கள் அதிக எண்ணிக்கை கொண்ட மாவவட்டமாக மதுரை மாவட்டம் முதல் இடமும் விழுப்புரம் மாவட்டம் 2வது இடம் பிடித்துள்ளது.
இந்த சாதி வன்கொடுமைகளுக்கு காரணம், காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் அலட்சியம் தான் காரணம். சாதி தொடர்பான எந்த வழக்கையும் இங்குள்ள காவல்துறை சுதந்திரமாகவோ அல்லது நியாயமாகவோ கையாளுவதில்லை. ஒவ்வொரு முறையும் தொண்டு நிறுவனங்களோ அல்லது பாதிக்கப்பட்டவர்களோ SC/ST பிரிவில் வழக்குப்பதிவு செய்யப் போராட வேண்டியுள்ளது.அரசியலமைப்பின் பாதுகாவலர்களே பாகுபாடுடன் நடந்து கொண்டால் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதியை எப்படி எதிர்பார்க்க முடியும்? ” என்று கேள்வி எழுப்புகின்றனர்.
அதே நேரத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பெறப்பட்ட பதில்களின்படி, 341 கிராமங்கள் தீண்டாமைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கிராமங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 2021 ஆம் ஆண்டில் மொத்தம் 597 தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதில் திருச்சியில் 42 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன என்று அறிக்கை கூறுகிறது. இதே காலகட்டத்தில் விழுப்புரத்தில் மட்டும் 15 கூட்டங்கள் நடந்துள்ளன.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில், மோகன் கூறுகையில், “சாதி வன்கொடுமைகளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சமூக நலத் துறைகள் மூலம் மாவட்ட நிர்வாகம் சாதிக் கொடுமைகளைத் தடுக்கும் வகையில் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். சமீபத்திய மாதங்களில் சாதிப் பாகுபாடுகள் ஓரளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளன. வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க அதிகாரிகள் உதவுவார்கள். மேலும், சாதியைப் பின்பற்றும் கிராமங்கள் சிறப்பு சீர்திருத்தத் திட்டங்களின் கீழ் கொண்டு வரப்படும்” என்று கூறினார்.
அதே நேரத்தில், “ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, ஏ.டி.ஜி.பி., சமூக நலத்துறையுடன் இணைந்து தீண்டாமை அதிகம் உள்ள முதல் 10 மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் அதிக விழிப்புணர்வு மற்றும் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். தீண்டாமை வன்கொடுமை கிராமங்களாக அடையாளம் காணப்பட்ட 445 கிராமங்களை மாதிரி நல்லிணக்க கிராமங்களாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் இதுபோன்ற மாதிரி கிராமங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும்.” என்று சமூக செயற்பாட்டாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“