ட்ரெக்கிங் செல்வது புது பேஷன். நகர வாழ்க்கை, அலுவலகப் பணி எனச் சோர்ந்து விழும்போது புத்துணர்வு வேண்டும் என்கிற ஆசை வரும். ‘வாழா என் வாழ்வை வாழவே’ என பலரும் கிளம்பிடுவர். ஆனால் 10 வயது சிறுமி இமயமலையின் அடிவாரத்திற்குச் சென்று சாதனை படைத்திருக்கிறார் எனச் சொன்னால் நம்புவீர்களா?
பேஸ் கேம்ப் எனச் சொல்லப்படும் இமயமலையின் அடிவாரம் அமைந்திருக்கும் உயரம் 5364 மீட்டர். 11 நாள்கள் பயணம் செய்து இந்த உயரத்தை அடைந்திருக்கிறார் மும்பையைச் சேர்ந்த 10 வயது சிறுமி ரிதம் மாமனியா (Rhythm Mamania). மும்பை பாந்த்ராவில் 5-ஆம் வகுப்பு படிக்கும் ரிதம், தன் பெற்றோர் ஹர்சல் மற்றும் ஊர்மியுடன் இந்தப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/1521224509_bc.jpg)
ரிதம் ஸ்கேட்டிங் பயிற்சி பெற்ற சிறுமி. “ஸ்கேட்டிங் உடன் ட்ரெக்கிங்கும் எனது விருப்பமாக இருந்தது. ஆனால் இந்த ட்ரெக்கிங் அனுபவம் ஒரு மலையேறுபவரின் பொறுப்புகளை உணரச் செய்தது. மலைகளில் சேரும் குப்பைகளை நிர்வகிப்பதன் அவசியத்தை உணர்த்தியது” எனக் கூறுகிறார் ரிதம்.
ரிதமுக்கு சின்ன வயதில் இருந்தே மலைகள் என்றால் மிகவும் பிடிக்குமாம். ரிதமின் அம்மா ஊர்மி பேசும்போது, “21 கி.மீ தூரம் துத்சாகர் மலைகளுக்குச் சென்றதுதான் அவளின் முதல் நீண்ட ட்ரெக்கிங். சகாயத்ரி மலைத்தொடர்களில் சிலவற்றுக்கு ட்ரெக்கிங் சென்றிருக்கிறாள். இமயமலையின் அடிவாரத்துக்கு சென்ற பயணத்தில் நிறைய தடைகள் இருந்தன. மைனஸ் 10 டிகிரிக்கு குறைவான தட்பவெப்பநிலை நிலவியது. ஆலங்கட்டி, பனிப்பொழிவு, சரிவுகள் எனக் கடந்தே சென்றோம்.”
“நேபாளை மையமாகக் கொண்டுள்ள Satori Adventures என்கிற குழுவோடு இணைந்து பயணித்தோம். அடிவாரத்தை அடைந்த பிறகு எல்லோரும் ஹெலிகாப்டரில் கீழே இறங்க முடிவெடுத்தனர். ரிதம் நடந்தே கீழே வர விரும்பினாள். நாங்கள் நான்கு பேர் மட்டும் நடந்து கீழ் இறங்கினோம்” எனத் தங்களுடைய ட்ரெக்கிங் அனுபவம் பற்றி விபரிக்கிறார் ஊர்மி. தைரியமான சிறுமி!