தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் கழுதைகளுக்கென்று ஒரு பிரத்யேக பண்ணை “The Donkey Palace” கடந்த மே 14-ம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.
கழுதைகள் குளம்பி வகையைச் சேர்ந்தவை. குதிரைகளை விட ஒரு மடங்கு கூடுதலாக மனிதர்களுக்கு உதவக் கூடியவை. மிகுந்த பொறுமையும், சகிப்புத்தன்மையும் கொண்டவை. 3 அடி முதல் 5 அடி வரை வளரக்குடியது. தன்னை விட ஒன்றரை மடங்கு சுமையை சுமக்கக் கூடியது. பெரும்பாலும் இதன் பிறப்பிடங்கள் அடர்ந்த வனப்பகுதியாகவே இருக்கும். வருடத்திற்கு ஒரு முறை குட்டி போடும் பழக்கம் கொண்டவை.
கழுதைகள் சராசரியாக ஒரு வேலைக்கு 300 மி.லி பால் சுரக்கும். இந்தப் பாலை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். உலகிலேயே பெரிய விலங்கினங்களில் மிகச் சிறந்த ஜீரணமண்டலத்தைக் கொண்டது கழுதைகளே. இதன் சாணம், சிறுநீர் மலைப் பிரதேசங்களில் மிகச் சிறந்த எரியூட்டியாகவும், கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது.
கழுதைகளின் காதுகள் பெரியாதாக இருப்பது, அதன் உடலை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. மிக நுண்ணிய ஒலிகளை உணரும் இதன் காதுகள் எதிரிகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள உதவுகிறது. கழுதைகள் 7 விதமான ஒலிகளை எழுப்பக் கூடியது. ஒவ்வொரு ஒலியின் அலைவரிசையும் ஒரு குறியீடாகும். நீண்ட ஒலி, தான் காமத்தோடு இருப்பதையும், கர்.. கர்… என்ற ஒலி கோபத்தையும், புர்… புர்… என்ற ஒலி உண்ணும் உணவில் பூச்சிகள் இருப்பதையும் உணர்த்தும். இந்த ஒலிதான் தூக்கத்திற்கு தயாரானதை உணர்த்தவும் பயன்படும்.
இந்தியாவில் மட்டும் கழுதைகள் மிகக் கேவலமாகவும், அவமானத்திற்குரிய ஜீவனாகவும் கருதப்படுவது வேதனையானது. இந்தச் சூழலில்தான் தமிழகத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் கழுதைகளுக்கென்று ஒரு பிரத்யேக பண்ணை “The Donkey Palace” கடந்த மே 14-ம் தேதி தொடங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியிலிருந்து அம்பைக்கு செல்லும் வழியில் முக்கூடல் பகுதியில் இந்தக் கழுதைப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.
17 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தப் பண்ணையில் சுமார் 100 கழுதைகள் உள்ளன. இங்கு கழுதைகள் மட்டுமின்றி மீன்கள் உள்ளிட்டவையும் வளர்க்கப்படுகின்றன.
இந்தப் பண்ணை குறித்து அதன் உரிமையாளர் பாபு கூறியது: “அழிந்துவரும் நிலையில் உள்ள கழுதைகளை பாதுகாப்பது, மீட்பது, அதுசார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில்தான் இந்தப் பண்ணை தொடங்கப்பட்டது. வெறுமனே இது கழுதைகளுக்கான பண்ணையாக மட்டுமின்றி தியேட்டர், குழந்தைகள் விளையாடும் பகுதி என பல்வேறு அம்சங்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள கழுதைகளுக்கு, கம்பு, தினை, சோளம், நாட்டு சோளம் தட்டையாக்கி உலர் தீவனமாக வழங்கப்படுகிறது. அதேபோல், புல், வைக்கோல், கோதுமை தவிடு, புண்ணாக்கு, சத்துமாவு உள்ளிட்ட பசுந் தீவனங்களையும் வழங்கி வருகிறோம். பண்ணையில் உள்ள கழுதைகளில் இருந்து மாதத்திற்கு 500 லிட்டர் பால் கிடைக்கும்.
பொதுவாக, குழந்தைகளுக்கு சீர்தட்டு ஏற்பட்டால் கழுதைப்பால் கொடுக்கப்படும். மேலும் இது ஒரு சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட். இந்தப் பண்ணையில் கிடைக்கின்ற பாலை விற்பனை செய்வதோடு, பெங்களூரில் உள்ள Limelush Organics pvt limited என்ற காஸ்மெட்டிக் கம்பெனிக்கு அனுப்பிவைக்கிறோம். இந்த நிறுவனத்தில் நான், கிரி சவுந்தர், அனீஸ் பாத்திமா, இர்ஷாத் மொஹ்மத், ராமசுப்பிரமணியன் ஆகியோர் பங்குதாரராக உள்ளனர்.
இந்தப் பண்ணையை தொடங்கியபோது, குடும்பத்தில் உள்ளவர்கள்கூட சிரித்தார்கள். கழுதைப்பாலின் மதிப்பு தெரிந்த பின்னர், எனக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதே போல எனது அப்பாவை தொடர்பு கொண்ட பலரும் ஆரம்பத்தில், “என்ன உன்னோட மகன் கழுதை மேய்க்கிறான்” என்று கிண்டலாக பேசினர். தற்போது அந்த நிலை மாறியுள்ளது. நிச்சயமாக விவசாயிகளுக்கான மாற்று வாழ்வாதாரமாக கழுதைகள் இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் கூறினார்.
கழுதைகளைப் பார்த்ததால் யோகம் கிடைத்தது மனிதர்களுக்கு, தங்களுக்கு யோகம் கிடைக்க யாரைப் பார்ப்பது என்ற கேள்விகளோடு நீண்ட நாட்களாக காத்துக் கிடந்த கழுதைகளுக்கு, இதுபோன்ற புதிய பண்ணைகளின் மூலம் யோகம் பிறக்கட்டும்.