புதுடில்லி: அடுத்த 20- 30 ஆண்டுகள் பா.ஜ.,வை மையப்படுத்தி தான் அரசியல் நடக்கும் என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
கருத்தரங்கு ஒன்றில் அவர் பேசியதாவது: தேர்தல் அரசியலில், பா.ஜ., மிகப்பெரிய வலிமையான கட்சியாக உருவாகி உள்ளது. இந்தியாவில் 30 சதவீத ஓட்டுகளை பெற்றுவிட்டால், பல ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்த முடியும். யாரேனும், எவ்வளவு பெரிய உச்சத்திற்கு சென்றாலும், மறுபடியும் கீழே வர வேண்டும் என்பது உண்மை. ஆனால், இது உடனே நடந்து விடாது. இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அடுத்த 5 அல்லது 10 ஆண்டுகளுக்குள் பா.ஜ.,வின் சரிவானது நிகழ்ந்துவிடாது.
சுதந்திரத்திற்கு பிறகு 40 – 50 ஆண்டுகள் காங்கிரசை சுற்றியே அரசியல் நடந்தது. எனவே அடுத்த 20- 30 ஆண்டுகள். பா.ஜ.,வை மையப்படுத்தியே அரசியல் நடக்கும். ஒன்று பா.ஜ.,வை ஆதரிக்க வேண்டும். அல்லது எதிர்க்க வேண்டும்.
சுதந்திரத்திற்கு பிறகு, 40 ஆண்டுகள் இந்த நிலையில் தான் காங்கிரஸ் இருந்தது. கடந்த சில ஆண்டுகள் முன்பு வரை, 1977 வரை காங்கிரஸ் கட்சியை எந்த தேசிய கட்சியும் வீழ்த்த முடியவில்லை. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை நீண்ட நாட்களுக்கு முன்பே நீங்கிவிட்டது. சரியான விஷயம் நடக்காவிட்டால், அடுத்த சில ஆண்டுகளுக்கு எந்த எதிர்க்கட்சியும், கூட்டணியும் தேசிய அளவில் ஆதிக்கம் செலுத்த முடியாது. 1984க்கு பிறகு காங்கிரஸ் கட்சி சொந்தமாக வெற்றி பெற முடியவில்லை. இவ்வாறு பிரசாந்த் கிஷோர் பேசினார்.
Advertisement